Saturday, October 07, 2006

மதம் தேவையா?

நண்பர் ஜோ அவர்களின் பதிவில் இந்த வரிகளை கண்டேன்..

//எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிற அளவுக்கு மத நம்பிக்கை கிடையாது//
இது சரியான மற்றும் தேவையான அணுகுமுறை என்றே தோன்றுகிறது..அவரின் வரிகள் என்னை யொசிக்க வைத்தன.. அதன் விளைவே இந்த பதிவு.. என் மனதுக்கு தோன்றியவைகளை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.. இதுதான் சரி என்றோ, தவறு என்றோ நான் கூறவில்லை.. ஏனெனில் நான் சரி என்று நினைத்த பலவற்றை தவறு எனவும் தவறு என நினைத்த சிலவற்றை சரி எனவும் பின்னாளில் முடிவு செய்து இருக்கிறேன்.. இன்றைய என் நம்பிக்கை நாளை பொய்க்கலாம். இது அனைவருக்கும் பொருந்தும் என்பது என் எண்ணம். அதே போல், நான் என்றும் மதம் சார்ந்த பதிவுகளையோ அதன் சர்ச்சைகளிலோ சிக்க கூடாது என நினைத்தவன்.. இருந்தாலும் இந்த பதிவு நல்ல முறையில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் இதனை உங்கள் மனதுக்கு கொடுக்கிறேன்.

நானும் யோசித்து பார்க்கையில் இது போன்றே பல தருணங்களில் உணர்ந்து இருக்கிறேன்.. பல நேரங்களில் நான் ஆத்திகனாகவும், நாத்திகனாகவும், இருந்து இருக்கிறேன். கடவுள் இருக்கிறாரா அவர் நல்லவரா? என்றெல்லாம் பல முறை கேள்விகள் எழுந்ததுண்டு.(அதற்கு முக்கிய காரணம் பிறப்பினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வேற்றுமைகள். ஒரு முறை என் பெற்றோரின் திருமண நாளை ஒரு ஆதரவற்றோர் விடுதியில் உள்ளவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டாடினோம்.. அன்று நான் சந்தித்த குழந்தைகளின் நிலை என்னை சாட்டையால் அடித்தது போல் இருந்தது... நான் என்ன நன்மை செய்ததால் இன்று அவர்களை விட சற்று வசதியான இடத்தில் இருக்கிறேன்? என்ன தீமை செய்ததால் அவர்கள் மற்றவரிடம் உணவுக்கும் மற்ற அடிப்படை வசதிகளுக்கும் கையேந்தும் நிலையில் இருக்கிறார்கள்? எனக்கு கிடைத்த பதில் நான் பிறந்த இடமும் அவர்கள் பிறந்த இடமும் தவிர வேறு காரணம் இருப்பதாக தோன்றவில்லை. இது பற்றி மேலும் பேசினால் பதிவு வேறு திசைக்கு திரும்பும் என்பதால் இதனை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்)
அது போலவே, கடவுள் இருக்கிறாரா/நல்லவரா என்று எத்தனை கேள்விகள் எனக்குள் தோன்றுகிறதோ கிட்டதட்ட அதே அளவு கேள்விகள் கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதரவாகவும் தோன்றுகின்றன.

எதனையும் அறுதியிட்டு முடிவுக்கு வர முடியாததுதான் இதன் முடிவு. எந்த ஒரு மனிதனையும் மனிதனாக மதிக்க வேண்டும் என்பதே என்றும் என் நிலைப்பாடு..

மதம் ஒவ்வொருவருக்கும் அவரது (அவர்களால் கட்டுப்படுத்த முடியாத)பிறப்பினால் அடையாளமாகிறது.. உலகில் ஒரே ஒரு மதம்தான் உண்மை என்றால், மற்ற மதத்தில் மனிதர்கள் தோன்ற காரணமான அந்த கடவுளே குற்றவாளி.
இதனை பிடித்துக் கொண்டு கொஞ்சம் மேலே போனால், மற்ற மதங்கள் ஏன் தோன்றின? தோன்ற வேண்டிய அவசியம் என்ன? ஏன் கடவுள் அதனை கட்டுப்படுத்த வில்லை. ஏன் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பதில்லை?(ஒரு மனிதனை உறுவாக்குவது அவனுடைய சூழ்நிலைகளும் அவன் சந்திக்கும் மனிதர்களும்தான். அதனையும் அவன் கட்டுப்படுத்த முடிவதில்லை.)
இது போல இன்னும் பற்பல கேள்விகள் பிறக்கின்றன..

ஆனால் ஒன்று.. மதங்களின் (சரியான) பழக்கங்களை பின்பற்றுகையில் மனிதன் தவறுகள் செய்யாமல் தன்னை காத்துக்கொள்கிறான். எப்படி சட்டங்கள் ஒரு குடிமகனை தவறுகள் செய்தால் தண்டனை உண்டு என பயமுறுத்தி அவன் தீய வழியில் செல்லாமல் இருக்க பயன்படுகிறதோ அது போல. ஆகவே மனித குலத்திற்கு பாதை தெரிந்து நடக்க மதங்கள் தேவை. இந்த நிலையிலேயே மதங்களுக்கான மதிப்பு இருக்க வேண்டும்.
அடுத்தவர் மதத்தினை, நம்பிக்கைகளை மதிக்க கூடிய மனநிலை காலத்தின் கட்டயமாகிறது.. அதே நேரத்தில் அந்த நம்பிக்கைகள் மற்ற மனிதரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். தவறாக இருப்பின் விவாதிக்ககூடிய, தவறு இருந்தால் மாற்றிகொள்ளக்கூடிய சூழ்நிலை நிலவ வேண்டும்.


சிறு வயதில் படித்த இந்த வரிகள் ஞாபகம் வருகிறது..
"மதம் என்பது குளிர் காலத்தில் எரியும் நெருப்பு போன்றது..தூர விலகினால் குளிரும்.. மிக மிக அருகில் நெருங்கினால் எரித்து விடும்."

Thursday, September 28, 2006

ஏமாத்திபுட்டீங்களே... திருமா தம்பி.

என்ன கொடுமை சார் இது?

கட்சிய உடைக்கறது, கடைசி நேரம் வரை வரை கூட்ட்ணியில இருக்க வச்சி அப்புரம் அணி மாற வைக்கறது, MLA க்களை அணி மாற வச்சி அறிக்கை விட வைக்கிறது,நடிகர்களை தன் பக்கம் இருப்பது போல் காட்டிக்கொள்வது..இது எல்லாத்தையும் வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்கறாங்களே..நியாயமா? அடுக்குமா?

அம்மா அந்த மாதிரி பன்னத ராஜதந்திரம் னு சொல்லிகிட்டு இருந்தோமே... அது எல்லாம் அம்மாவாலதான் முடியும்னு வேற வாய்சவடால் விட்டுகிட்டு இருந்தோமே.. கொடுத்த அல்வாவ முந்திரி, திராட்சையோட சேத்து இப்போ திருப்பி கொடுக்கறாங்களே.. இப்பொ எல்லாம் போச்சே...என்ன் பன்றதுன்னு புரியலியே...கண்ண வேற கட்டுதே..அய்யோ...அம்மா...

Monday, August 07, 2006

தண்ணீர்..தண்ணீர்..

திருப்பூரில் வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு பெற விண்ணப்பம் செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்கள்.. இன்று(07-08-06 7AM or 11AM) முதல் விண்ணப்பிக்கலாம்..முதல் 2000 பெருக்கு மட்டும் இனைப்பு முதலில் கொடுக்கப்படும் என அறிவித்து உள்ளார்கள்.

குடிதண்ணீருக்காக அங்கு அடிக்கும் நல்ல வெயிலில் ஒரு முழு நாள் நிற்க தயாராய் மக்கள்.

அதற்கு நேற்று 06-08-06 பகல் பணிரெண்டு மனி அளவில் நிற்கும் மக்கள் வரிசையில் ஒரு பகுதி


இந்த வரிசை நீன்ட தூரம் வரை செல்கிறது.




இந்த இணைப்பு தங்களால்தான் கொடுக்கப்பட்டது என கூறி அரசியல் ஆதாயம் தேடும் அனைத்து கட்சிகள்.

வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு தேவையான தண்ணீரை பெற இப்படியெல்லாம் மக்கள் அவதியுற வேண்டி இருக்கிறது :-(


படங்கள் : என் செல்போனில் கிளிக்கியது...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

பதிவுலகில் உள்ள அனைவருக்கும் (தாமதாமான) என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
இந்த நேரத்தில் எனக்கு மிக பிடித்த ஒரு சில வரிகள்..உங்களுக்காக...

Around the corner I have a friend
In this great city that has no end,
Yet the days go by and weeks rush on,
And before I know it, a year is gone

And I never see my old friends face,
For life is a swift and terrible race,
She knows I like her just as well
As in the days when I rang her bell,

And she rang mine.
We were younger then,
And now we are busy, tired men.
Tired of playing a foolish game,
Tired of trying to make a name.

"Tomorrow" I say "I will call on Jane"
"Just to show that I'm thinking of her"

But tomorrow comes and tomorrow goes,
And distance between us grows and grows.
Around the corner!-yet miles away,
"Here's a telegram sir-"
"Jane died today."
And that's what we get and deserve in the end.
Around the corner, a vanished friend.

If you love someone, tell them.
Remember always to say "what you mean".
Never be afraid to express yourself.
Take this opportunity to tell someone what they mean to you.
Seize the day and have no regrets.
Most importantly, stay close to your friends and family,
They have helped to make you the person you are today,
What it's all about anyway. Pass this along to your friends.
Let it make a difference in your day and theirs.

Thursday, August 03, 2006

பெப்ஸி கோக்கில் 24 மடங்கு பூச்சி மருந்து..

பெப்ஸி கோக்கில் 24 மடங்கு பூச்சி மருந்து இருக்கிறது என விஞ்ஞானம், சுற்றுச்சூழல் கழகம் ஆய்வு நடத்தி தெரிவித்து உள்ளது...

http://thatstamil.oneindia.in/news/2006/08/03/pepsi.html
http://www.ibnlive.com/news/pesticide-cola-poison-content-is-now-deadlier/17411-3.html

கொசுறு : அமரிக்கவில் பெப்ஸி கோக் சாம்பில்ஸை ஆய்வு செய்த பொழுது அதில் இந்த நச்சுப்பொருட்கள் எதுவும் இல்லை- நேற்றைய CNNIBN-ல் விவாதத்தில் சொன்ன செய்தி.


பெப்ஸி கோக் குடிக்கலாமா கூடாதா?

Monday, July 24, 2006

பிரின்ஸ்/பிரியதர்ஷினி

இந்த வார இறுதியில் பார்த்த செய்திகளில் பாதித்தவை இரண்டு...

1. 5 வயது சிறுவன் 50 மணி நேர போரட்டத்திற்கு பின் தவறி விழுந்து இருந்த குழியில் இருந்து மீட்கப்பட்டான்..ஒரு பிஞ்சு உயிர் காப்பற்றப்பட்டது...மீட்டவர்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...இது தோல்வியில் முடிந்து விடுமோ என பயந்து கொண்டு இருந்தேன்...(இது போன்ற சில சம்பவங்கள் இதற்கு முன் தோல்வியில் முடிந்து கண்டு மணம் நொந்து இருந்தேன்).

அதே நேரம் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? உயிரின் மதிப்பு அது போகும்போதுதான் கவனிக்கப்படுமா? இன்னும் எத்தனையோ பேர் இருந்து கொண்டே சாகிறார்கள்... இருக்கும் பொழுதே கவனிக்கலாமே... "மரணம் மட்டுமா மரணம்" என்ற லிவிங் ஸ்மைல் வித்யா வின் கவிதை நினைவுக்கு வருகிறது..கூடவே ஒரு சில அலுவலகங்கள் இருக்கும்பொழுது தேவைகளை கவனிக்கமல், வேலையை விட்டு போகிறேன் என சொன்னதும் onsite வாய்ப்பு கொடுப்பதும், சம்பளம் அதிகம் ஆக்கி கொடுப்பதும் ஞாபகத்துக்கு வருகிறது..

2. பிரியதர்ஷினி என்பவர் 12 ஆண்டுகளுக்கு முன் கற்பழித்து கொலை செய்யப்படுள்ளார்..அந்த வழக்கில் நீதிபதி இவன்தான் குற்றம் செய்தவன் என தெரிந்தும் சாட்சி சரியாக இல்லாததால் விடுதலை செய்வதாக அறிவித்து இருக்கிறார்கள். கொலை.. கற்பழிப்பு- இரண்டும் எவ்வளவு பெரிய குற்றங்கள்/பாவங்கள்?..இதனை செய்தவன் இப்பொழுது சட்டப்படிப்பு படித்து வருகிறான்.....பாவப்பட்ட அந்தப்பெண்ணின் 70 வயது தந்தை நியாயத்துக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்.

தப்பை சாட்சி இல்லாமல் செய்தால் தவறில்லையா? தண்டனை இல்லையா? இது ஒரு தவறான முன்னுதாரனமாக ஆகிவிடாதா?

கூடவே இவந்தான் தவறு செய்தது என எப்படி நீதிபதிக்கு சாட்சிகள் இல்லாமலும் எப்படி தெரிந்தது?...அப்பட்டமாக 100% தெரிந்தால் அதன் அடிப்படையில் தன்டனை கொடுக்க சட்டம் வழி செய்யுமா? அப்படி செய்தால் அது தவறாக பயன்படுத்தப்படுமே என்ற ஆதங்கமும் எழுகிறது.. என்னதான் இதற்கு தீர்வு?

Wednesday, June 28, 2006

தேன்கூடு போட்டி - சில யோசனைகள்

சமீபத்தில் அருமையான படைப்புக்களோடு தேன்கூடு போட்டி இனிதே நடந்து முடிந்தது..நல்ல படைப்புக்களை எழுத ஊக்குவிப்பதும், அதற்கு அங்கீகாரம் அளிப்பதும் இனிமையானவை.
அந்த போட்டியில் வாக்களிக்கும்பொழுது எனக்கு தோன்றிய சில யோசனைகளை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யோசனை 1:

ஒருவர் அதிக பட்சம் 3 படைப்புகளுக்கு மட்டுமே வாக்கு அளிக்கலாம்.. தன்னுடைய விருப்ப வரிசையையும் (1,2,3) தெரிவிக்க வேண்டும்..
தேன்கூடு அமைப்பளர்கள் ஒவ்வொருவருடைய முதல் விருப்ப பதிவிற்கு 3 புள்ளிகளும், இரன்டாம் விருப்ப பதிவிற்கு 2 புள்ளிகளும், மூன்றாம் விருப்ப பதிவிற்கு 1 புள்ளிகளும் வழங்க வேண்டும்.

வாக்கெடுப்பு முடிந்த பின் மொத்ததில் அதிக புள்ளிகளை பிடித்த 3 பதிவுகளை அந்த வரிசைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம்.
-------------------------
யோசனை 2:

ஒவ்வொரு வாசகருக்கும் மொத்தம் 10 புள்ளிகள் அளிக்கலாம்.. அவர்கள் அதனை அவர்களுடைய விருப்பப்படி எத்தனை படைப்புகளுக்கு வேண்டுமனாலும் பகிர்ந்து அளிக்கலாம்..

வாக்கெடுப்பு முடிந்த பின் மொத்ததில் அதிக புள்ளிகளை பிடித்த 3 பதிவுகளை அந்த வரிசைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம்.
-------------------------
யோசனை 3:

ஒவ்வொரு படைப்பிற்கும் வாசகர்கள் 1 முதல் 10 வரையில் புள்ளிகள் அளிக்கலாம்..

வாக்கெடுப்பு முடிந்த பின் மொத்ததில் அதிக புள்ளிகளை பிடித்த 3 பதிவுகளை அந்த வரிசைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம்.
-------------------------

மேலும் வாக்களிப்பு முறையை தெளிவாக வாக்கு அளிக்கும் இடத்தில் வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டும்..

இதை படிக்கும் அனைவரும் (தேன்கூடு அமைப்பளர்கள்/ வாக்களர்கள்/ படைப்பாளிகள்) இதை பற்றிய கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கெட்டுக் கொள்கிறேன்.

பி.கு : எனக்கு பிடித்த வலைதளமான தேன்கூட்டிற்கு எதுவும் சிறு பங்களிப்பு செய்ய முடியுமா என்ற நோக்கில்தான் இந்த பதிவை எழுதினேன்..குற்றமோ, குறையோ சொல்ல அல்ல.. இதை படிக்கும் வாசகர்கள்/தேன்கூடு அமைப்பளர்கள் அதனை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன்.. யாருக்கும் எதுவும் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கவும்.. உடனே இந்த பதிவு நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


வாசகர்களிடம் இருந்து வந்த யோசனைகள்

1. எழுதுபவரின் பெயரை தெரியப்படுத்தக்கூடாது.
(இதில் சில சிரமங்கள் இருக்கின்றன..
படைப்புக்களை தேன்கூட்டிற்கு நேரடியாக அனுப்பவேண்டும். இதற்காக ஒரு தனி பெயரில் ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கப்பட வேண்டும்)

Thursday, June 22, 2006

6

ஆறு விளையாட்டிற்கு இந்தப் புதியவனை அழைத்த நண்பர் நாகை சிவாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்..... பதிவுலகில் எனக்கு பெரும் உதவி செய்த பொன்ஸ் மற்றும் Devக்கும் என் நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்..

இதோ எனது ஆறு உங்கள் பார்வைக்கு..

மறக்க முடியாதவை 6 :

1. குழந்தையுடன் வெளியில் வந்த செவிலி(நர்ஸ்), கை நீட்டிய யாரிடமும் கொடுக்காமல், என்னிடம் கொடுத்து உங்ககிட்ட தான் முதல்ல கொடுக்க வேண்டும் என்று குழந்தை பிறந்தவுடன் என் மனைவி கூறியதாக சொல்லிய அந்த வார்த்தைகளும், கண்ணீர் + பயத்துடன் வாங்கிய அந்த பிஞ்சு உடம்பின் முதல் ஸ்பரிசமும்..

2. பெண்ணை பார்த்து/பேசி விட்டு வெளியில் வந்ததும், அனைவருக்கும் பிடித்ததால், அடுத்த ஐந்தாவது நிமிடம் நான் கேட்டுக்கொண்ட படி என் தந்தை தொலைபேசியில் பெண்ணிடம் கேட்டு அவர் சொன்ன பதில் " எனக்கு 100% பிடிச்சு இருக்கு".

3. முதல் மாத சம்பளம்.

4. நண்பனுடன், சென்னை நெடுஞ்சாலையில் காற்றை கிழிக்கும் வேகத்தில் எதிர் வரும் லாரி ஓட்டுனரும், தாண்டிக் கொண்டு இருக்கும் பஸ் ஓட்டுனரும் கத்த அவர்களுக்கு நடுவில் ஒவர்டேக் செய்தது...

5. ஒன்பதாம் வகுப்பில், விடுதியில் சேர்ந்த ஒரு வாரத்தில் வீட்டு நினைப்பு வந்து யாருக்கும் தெரியாமல் நண்பன் உதவியுடன் தப்பித்து வீட்டுக்கு ஓடி வந்து உதை வாங்கியது..

6. இரவு நேரத்தில் ரஜினியை தனியாக பார்த்து ஒரு வார்த்தை பேசியது.

முடியாதவை 6:

1. சனி, ஞாயிறுகளில் எட்டரைக்கு முன் எழுவது + 1 மணிக்கு முன் குளிப்பது

2. படுத்தவுடன் தூங்குவது

3. அணாவசிய செலவுகளை தவிர்ப்பது.

4. எதையும் கடைசி நெரத்திற்கு தள்ளிப் போடாமல் ஆரம்பத்திலேயே செய்வது..

5. முடிந்து போன விஷயங்களில் இப்படி நடந்து இருக்க கூடதா என எண்ணாமல் இருப்பது.

6. பேப்பரில் விளையாட்டு/அரசியல் செய்திகளோடு மற்ற செய்திகளையும் படிப்பது..

தவறுகள் 6 :

1. 40000 ரூபாய்க்கு கிரசன்ட் கல்லூரியில் B.E கிடைத்தும் பணம் கொடுத்து படிக்க மாட்டேன் என்று வீராப்பு பேசியது..

2. கல்லூரி பேருந்தில் நான் சொன்ன ஒரு சாதாரன ஜொக்கிர்கு அசாதாரனமாய் சிரித்த பெண்ணை கவனிக்க ஆரம்பித்து கொஞ்ஜ நாளிலேயே "லவ் பன்றேன் இவளை" என்று பந்தாவுக்காக சொன்னது.

3. நாம் நினைப்பது தான் சரி என்ற எண்ணத்தில் வீட்டில் தந்தையுடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போக கிளம்பியது..
4.
5.
6.
இடம் கொஞம் விட்டு வைப்போம், இனி செய்யப் போகும் தவறுகலுக்கு :-)

அடிக்கடி பார்ப்பவை 6 :

1.தேன்கூடு
2.தமிழ்மனம்
3.முத்து(தமிழினி)
4.குழலி
5.பொன்ஸ் பக்கங்கள்
6.நுனிப்புல்

பிடித்த பாடல்கள் 6 :

1.பூவே பூச்சூடவா
2.ஷென்பகமே.. ஷென்பகமே..
3.செந்தாழம்பூவில்..
4.பருவ நிலா.. நணைகிறதே
5.பில்லை நிலா
6.சுராங்கனி

அழைக்கும் ஆறுவர் :
1.இட்லிவடை : தேர்தல் சமயத்தில் செய்திகளை சூடாக பரிமாறியவர்..நகைச்சுவை பதிவுகளையும் அவ்வப்பொழுது நன்றாக கொடுப்பவர். நடுநிலைவாதியாக காட்டிக்கொன்டாலும் ஆ.தி.மு.க மேல் கொஞ்ஜம் பாசம் அதிகம் கொன்டவர் என்பது என் எண்ணம்.

2.துபாய்வாசி : பல நல்ல பதிவுகளுக்கு சொந்தக்காரர்..மனிதாபிமானமும், நகைச்சுவையும் கொண்டவர்...சொர்க்கத்துக்கு போரேன்னு சொல்லிகிட்டு இருக்கிறவர்..

3..லக்கிலுக் : காமிக்ஸ் பிரியர்...கலைஞர் அபிமானி.. ஒரு திராவிட தமிழர்.

4.நன்மனம் : பெயரை போலவே நல்ல உள்ளம் கொண்டவர்.. எனக்கு முதலில் சுரதாவை அறிமுகப்படுத்தியவர்(சரி..சரி..அவர திட்டதீங்க).. என் பதிவில் உள்ள எழுத்துப்பிழைகளை தனிமடலில் அன்பாக சுட்டிக் காட்டிய அன்பர்

5.syam : எதாவது எழுத ஆரம்பிங்க..அப்புரம் பாத்துக்கலாம் என்று என்னை எழுத தூண்டியவர்..சியாம் அன்னச்சி, 6 பதிவயாவது தமிழ்ல பொட்டுடுங்க..தங்கிலீஷ்ல வேணாம்..

6.கைப்புள்ள : நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல...

Wednesday, June 14, 2006

சூப்பர் ஸ்டாரை பார்த்த போது...

இது எனக்கு எற்பட்ட ஒரு அனுபவம்... இதுக்கெல்லாம் ஒரு பதிவா என்று சன்டைக்கு வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.(கொல்கிறேன்??):-)

ஒரு நாங்கைந்து வருடங்கள் முன்பு பொன்னியின் செல்வன் நாடகம் நந்தனத்தில் YMCA மைதானத்தில் நடக்கப் போகிறது என்று கேள்விப்பட்டேன்... அந்தக்க்கதையை தூக்கம் மறந்து படித்தவன் நான்..எனக்கு பல முறை படித்தும் அலுக்காத கதை அது...படிக்கும் போதே மனத்திரையில் காட்சிகள் ஓடும்.. அப்படிப்பட்ட கதையை, 5 பாகங்கள் கொண்ட நீண்ண்ண்ட கதையை எப்படி நாடகமாக காட்டப் போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் போயே தீருவது என்று முடிவு செய்தேன்.

சோதனையாக அந்த வீக் என்டில் திருப்பதியில் உள்ள ஒரு நண்பனின் வீட்டுக்கு போவது என என் நண்பர்கள் முடிவு எடுத்தார்கள்..சன்டே மதியம் கிளம்பி வந்து விட வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் நானும் கிளம்பினேன்..ஆனால் அவர்கள் சொன்னபடி செய்ய வில்லை..என் நண்பர்கள் அல்லவா?...நான் மட்டும் கிளம்பி வந்து விட்டேன்..

மாலை 5 அல்லது 6 மனி அளவில் அங்கு போய் செர்ந்தேன்..உள்ளே நுழையும் இடத்தில் நாசர் அவர்கள் நின்று இருந்தார்கள்... பரவாயில்லேயே.. நாசர் போன்ற சினிமா நட்சத்திரம் எல்லாம் வந்து இருக்கங்களே என்ற வியப்புடன் உள்ளே சென்றென்..சற்று நேரத்தில் ரேவதி அவர்களும் வந்தார்கள்.. இன்னும் கொஞ்ஜம் நேரம் கழித்து நான் மிகவும் வியந்து ரசிக்கும் கமல் அவர்கள் வந்தார்கள்...எனக்கு ஒன்றும் புரிய வில்லை.."அப்படி போடு" என்று தோன்றியது..சந்தோசமாக இருந்தது..

இன்னும் கொஞ்ஜ நெரம் சென்ற பின் பயங்கர விசில் சத்தம்.. வேற என்ன.....ஆமாம்..ஆமாம்.. அவரேதான்... தலைவர் சூப்பர் ஸ்டார் அவர்களும் அங்கு தன் மனைவி மற்றும் இன்னும் ஒருவரோடு( லதாவின் தம்பி ராகவேந்திரா என்று சொன்னார்கள்..உண்மையா என்று தெரியாது) வந்தார்...என் சந்தோசத்தை சொல்லவும் வேண்டுமா?..
ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால் இதுவரை பார்த்தது இல்லை.. பார்க்க செல்ல வேன்டும் என்று தோன்றியதும் இல்லை.. ஆனால் இப்போது பக்கத்தில் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் பொங்கியது...சிறிது நேரத்தில் நாடகம் தொடங்கியது.. நான் பிறகு அதில் மூழ்கி விட்டேன்..

மிகவும் அருமையாக அந்த நாடகத்தை வழங்கினார்கள்.. நாசர் அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த "அதித்த கரிகாலன்" ஆக அருமையாக நடித்தார்கள்..முக்கியமான நிகழ்ச்சிகளை அருமையாக தேர்ந்து எடுத்து மற்றவைகளை இரண்டு கட்டியங்காவலர்கள் மூலம் சொல்லி முழுமை
படுத்தினார்கள்..திருப்தியாக 11.45 மணி அளவில் நாடகம் முடிந்தது... மறுபடியும் தலைவர் ஞாபகம் வந்தது.....

எப்படியாவது பக்கத்தில் பார்த்து விட வேண்டும் என்று வேகமாக கீழே இறங்கிணேன்..ஆனால் யாரையும் வெளியே விடாமல் ரஜினி மற்றும் மற்றவர்களை முதலில் வெளியே அனுமதித்தனர்.. இரண்டு அடி தொலைவில் ரஜினியை பார்த்தேன்..சிறிது நேரம் கழித்து மற்றவர்களை வெளியில் செல்ல அனுமதித்தனர்.. ரஜினியின் கார் பக்கத்திலேயே இருந்தது.. அம்பாஸ்சிடர்.. TMU 6009 என நினைக்கிறேன்... அவர்கள் ஏறிக்கொண்டு கண்ணாடியை எற்றி விட்டுக்கொண்டு கிளம்பினார்கள்..

நான் நம்பரை ஞாபகம் வைத்துக் கொண்டு வேக வேகமாக தூரத்தில் நிறுத்தி இருந்த என்னுடைய பைக்கை எடுக்க ஓடினேன்.. எடுப்பதற்க்குள் நிறைய நேரம் ஆகி விட்டது... சரி.. பரவாயில்லை..அதான் இவ்ளோ பக்கத்தில் பார்த்தோமே என்று நினைத்துக்கொண்டு வண்டியை எடுத்துக் கொன்டு வேகமாக (எப்போதும் போல்) சென்றேன்.. அப்போது சிறிது தூரத்தில் ஒரு அம்பாஸ்சிடர் ரைட் டர்ன் சிக்னல் போட்டுக்கொண்டு நிற்பது தெரிந்தது...

ஏதோ ஒரு நம்பிக்கையில் இன்னும் வேகமாக வண்டியை முறுக்கிக்கொண்டு சென்றேன்.. பக்கத்தில் நெருங்க நெருங்க அது சூப்பர் ஸ்டார் வண்டி என்பது உறுதியானது..வேகமாக வந்து பக்கத்தில் நிறுத்தினேன்.. அங்கு யாருமே இல்லை...வண்டி நின்ற சத்தம் கேட்டு முன்னே அமர்ந்து இருந்த ரஜினி திரும்பினார்...முகத்தில் ஒரு புன்னகையுடனே திரும்பினார்...இரவு நேரம் ஆதலால் கண்ணாடியை இறக்கி விட்டு இருப்பார் என நினைக்கிறேன்..

எனக்கு எதுவும் புரிய வில்லை.. என்ன பேசுவது என்றே தெரிய வில்லை.. "ஹல்லோ சார்.. எப்படி சார் இருக்கீங்க" என்றேன்..உற்சாகக் குரலில்... அவர் "நல்லா இருக்கேன்" என்றார் சிரித்துக்கொண்டே...எனக்கு வேறு எதுவும் தோன்ற வில்லை..."தேங்ஸ் சார்" என்றென். ஏன் அப்ப்டி சொன்னேன்??..ஒரு வேலை என்னிடம் பேசியதற்கு நன்றி சொல்லி இருப்பேன் என நினைக்கிறேன். அவரும் "சரி வருகிறேன்" என கூறிவிட்டு சென்று விட்டார்..

அது நடந்து ஒரு சில நிமிடத்திற்கு பிறகு தான் எல்லாம் தெளிவாக புரிந்தது... ஆகா.. எதாவது பேசி இருக்கலாமே?ஆட்டோகிராப் வாங்கி இருக்கலாமே..கை குலுக்கி இருக்கலாமே, என்று எத்தனையோ இருக்கலாமே தோன்றியது...என்ன செய்வது.. அவர் பக்கத்தில் இருந்த நேரத்தில் ஒன்றும் தோன்ற வில்லயே...அன்று நான் நொந்து கொண்டேனா இல்லை சந்தொஷப்பட்டேனா என தெரியாமல் ஏதொ ஒரு போதையுடன்(அந்த போதை இல்லீங்க) அறைக்கு வந்து சேர்ந்தேன்....

பி.கு : பதிவு எழுத வேண்டும் என்று ஆரம்பித்த பின் என்ன எழுதுவதென்று தோன்றவில்லை.. அப்போது தான் சூப்பர் ஸ்டாரை நேரில் பார்த்தும் பேசவேண்டும் என்று தோன்றாத இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.. வாழ்க்கை இப்படித்தான்.. நாம் ரொம்ப எதிர்பார்க்கும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது வார்த்தை வராமல் போய்விடுகிறது .

Wednesday, May 31, 2006

நள்ளிரவில்..

கல்லூரி முடித்து சென்னைக்கு வந்து நானும் என் நண்பனும் Bachelor's paradise எனப்படும் திருவல்லிக்கெனியில் ஒரு அறை எடுத்து தங்கி இருந்தோம்..அந்த விடுதியில்(Mansion) இடது பக்கத்தில் வரிசையாக அறைகள் இருக்கும்..வலது பக்கம் மாடி படி ஏறினால் 2 அறைகள் மட்டும் இருக்கும்..குளியல் அறை இணைப்பு கொன்டவை அவை....நாங்கள் அதில் ஒன்றை எடுத்து தங்கி இருந்தோம்.. அங்கே இரண்டு கட்டில்கள் இருக்கும்.. ஒரு கட்டிலுக்கு பின்னால் கதவுடன் கூடிய சிறிய பலகனி(Balcony) இருக்கும்..அந்த கதவை திறந்தால் இரவு நேரங்களில் கும்மிருட்டு தான் புலப்படும்..அந்த கட்டிலைத்தான் நான் உபயோகப்படுத்துவேன்...சிறிது இடைவெளி விட்டு அறைக்கு உள்பக்கதில் என் நண்பனின் கட்டில் இருக்கும்..பலகனிக்கு கீழே ஒரு சிறிய பாதை இருக்கும்...ஒரு பெரிய மரமும் எங்கள் அறைக்கு அருகாமையில் இருக்கும்...எப்போதும் அந்த கதவை திறந்து வைத்துக்கொண்டுதான் உறங்குவோம்.. அப்போது தான் கொஞ்சமாவது காற்று வரும்.வழக்கம் போல ஒரு நாள் தூங்கிக்கொண்டு இருந்தோம்.. அதிகாலை அல்லது நள்ளிரவு 3 மனி இருக்கும்...


அப்போது... திடீர் என்று என் நெஞ்சில் ஏதோ/யாரோ அழுத்துவது போல ஒரு உணர்வு எற்பட்டது.. "ஹா" என்ற கொஞ்சம் பெரிய சத்ததுடன் நான் எழுந்தேன்... அந்த சத்தம் கேட்டு முழித்த/பயந்த என் நண்பன் "அய்யோ அய்யோ" என்று பயங்கரமாக அலற ஆரம்பித்தான்..அதனால் மேலும் அரன்ட நான் அவனுடைய கட்டிலுக்கு தாவி அவன் வாயை பொத்தி "இரு இரு சத்தம் போடாதே" என்றேன் மெல்லமாக பயந்த குரலில்..அவனும் இன்னும் சற்று பயந்த குரலில் "என்ன ஆச்சு ஏன் கத்தின" என்று கேட்டான்..."என் நெஞ்சில் ஏதோ அழுத்தியது பொல இருந்தது" என்றேன்....அவன் அவசரமாக எழுந்து விளக்கை போட்டான்..என்னிடம் "முதலில் அந்த கதவை சாத்து" என்றான். நானும் வேகமாக கதவை சாத்தினேன்..கடிகாரத்தை பார்தோம்.. அது 3 AM என்றது,,, என்ன செய்வது என்று ஒரிரு வினாடிகள் யோசித்தோம்... உடனே அந்த அறையை விட்டு வெளியேருவது என்று முடிவு செய்தோம்...அவசர அவசரமாக சட்டையை மாட்டிக்கொண்டு, ஒன்றாக சேர்ந்து கீழே இறங்கிச் சென்றோம். என்னுடைய வண்டியை எடுத்துக்கொன்டு மெரீனாவிற்க்கு விரைந்தோம். அங்கு இருந்த சிமென்ட் பென்ச்சில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்தோம்.. விடிந்து வெளிச்சம் வந்த பின் அறைக்கு வருவது என்று முடிவு செய்தோம்..

பிறகு பேச ஆரம்பித்தொம்...அப்பொழுது அவன் நான் அலறிய சத்தம் கெட்டு எதுவோ பலகனியில் வந்து விட்டது என்று நினைத்து பயந்ததாக கூறினான்...எனக்கு என் வீட்டில் சிறு வயதில் ஒரிரவில் தூக்கம் வராமல் போர்வை வழியாக Zero watts பல்பை பார்த்துக்கொன்டு இருந்த பொழுது அறை வாசலில் மூன்று வேறு வேறு நிறத்தில் புடவை உடுத்திய பெண்கள் என்னைப்பார்த்து "வா.. வா.." என்று அழைத்தது... நான் பயந்து போனது,.. கனவா/உண்மையா/பிரமையா என்று தெரியாமல் நீண்ட நாட்கள் குழம்பியது... அதை சுத்தமாக மறந்தது எல்லாம் இப்பொது ஒட்டு மொத்தமாக ஞாபகத்துக்கு வந்தது...இன்னும் பிறர் சொல்லி நாங்கள் சிரித்த சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்து இப்போது பயமுறுத்தப் பார்த்தது ..எப்படியோ காலை 5.30 மணி வரை அங்கே பல்லை கடித்து கொண்டு இருந்து விட்டு பிறகு அறைக்கு சென்றொம்...சென்று மெதுவாக கதவை திறந்து உள்ளே போனோம்..

வேறு ஒரு நண்பனிடம் நடந்தவற்றை கூறி அவனை அன்று துணைக்கு வரச்சொன்னோம்.. அவனும் இரவு வேளைகளில் இரண்டு நாட்கள் வந்தான்.. பிறகு ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூடவே Gold flake Kings நிறைய வாங்கி வைத்துக்கொண்டு தனியாக உறங்க சென்றோம். புதிதாக நண்பன் வந்ததால் இழுத்து ஒன்றாய் போட்ட என் கட்டிலை இழுத்து தனியாக போட்டோம்.. பிறகு பேசிக்கொன்டே புகை பிடித்தபடியே அறையை நோட்டம் விட்டேன்.. என் பார்வை அடுத்த கட்டிலுக்கு அடியில் சென்றது... அங்கு..........


என் கட்டிலுக்கு மேல் மாட்டி வைத்து இருந்த காலண்டர் அமைதியாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் முன்று நாட்களுக்கு முந்திய தேதியுடன் புன்னகையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது ...


பி.கு : இது என் முதல் பதிவு.. வலைப்பதிவு நண்பர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்..அடங்குடா என்று சொன்னால் நத்தை போல சுருக்கிக்கொண்டு அவ்வப்பொது தலையை மட்டும் நீட்டி பின்னூட்டம் இடுவதோடு நிறுத்திக் கொள்வேன்.. பரவா இல்லை எழுது என்பீர்களேயனால்...சரி...சரி..நிப்பாட்டிக்கிறேன்....நீங்க இனி பேசுங்க...

இந்த சம்பவம் எனக்கு பொன்ஸ் அவர்களின் இந்த பதிவை படித்த பொழுது ஞாபகத்துக்கு வந்தது.. மெலும் பொன்ஸ் , நாமக்கல் சிபி , Syam அவர்களின் வாழ்த்தும் ஊக்கமும் எழுத தூன்டியது..அவர்களுக்கு என் நன்றிகள்...( குறைந்தது 3 பின்னூட்டமாவது கிடைக்கும்னு நினைக்கிறேன்.. பதில் சொல்லி 6 ஆக்கிடலாம் :-) ......பார்க்கலாம்..