Monday, June 18, 2007

அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக்கவேண்டும் - ஜெயலலிதா திடீர் கோரிக்கை

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் அப்துல் கலாமையே நிறுத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான மூன்றாவது அணி கோரிக்கை விடுத்துள்ளது. அவரை சந்தித்து போட்டியிடுமாறு கோரப் போவதாகவும், அவரையே ஆதரிக்கப் போவதாகவும் இந்தக் கூட்டணி அறிவித்துள்ளது. இன்று ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த 3வது அணியின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக் கூட்டத்தில் ஜெயலலிதா தவிர, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, இந்திய தேசிய லோக்தள் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா, ஜார்க்கண்ட் மோச்சா தலைவர் பாபுலால் மராண்டி, அஸ்ஸாம் கன பரிஷத் தலைவர் பிரிந்தாபன் கோஸ்வாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றைய கூட்டத்தில் 3வது அணிக்கு புதிய பெயரும் சூட்டப்பட்டது. இனிமேல் இந்தக் கூட்டணி ஐக்கிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று அழைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகும். இந்தப் பெயரை சூட்டியவர் முதல்வர் கருணாநிதி. இப்போது கிட்டத்தட்ட அதே பெயரில் ஜனநாயகத்தையும் சேர்த்து தனது அணிக்கு பெயர் சூட்டியுள்ளார் ஜெயலலிதா. பாத்திமா பீவி.... முன்னதாக மூன்றாவது அணியின் சார்பில், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அல்லது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், முன்னாள் தமிழக ஆளுநருமான பாத்திமா பீபி ஆகியோரில் ஒருவரை நிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. டான்சி வழக்கில் ஜெயலலிதா மீது நீதிமன்றமே குற்றம் சாட்டிய நிலையிலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஏதோ காரணத்துக்காக, ஜெயலலிதாவையே முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் பாத்திமா பீவி என்பது நினைவிருக்கலாம். கேரளத்தைச் சேர்ந்த பாத்திமா பீவிக்கு வேண்டப்பட்ட மலையாள நிதி நிறுவன அதிபரை மிரட்டியதால் தான் வெங்கடேச பண்ணையாரை எண்கவுண்டரில் போட்டுத் தள்ளியது அதிமுக அரசு என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டதும் நினைவுகூறத்தக்கது. ஆனால், பாத்திமா பீவிக்கு பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. அதே போல பரூக் அப்துப்லாவுக்கும் கூட்டணியில் பெரும்பாலானவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து பெண் வேட்பாளரை நிறுத்தி தங்களுக்கு செக் வைத்த காங்கிரசுக்கு பதிலடி தரும் வகையில் அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தக் கோருவது என முடிவெடுக்கப்பட்டது. இதன்மூலம் தேசிய அளவில் தங்களது கூட்டணிக்கு புதிய மரியாதை கிடைக்கும் என ஜெயலலிதா கருதுவதாகத் தெரிகிறது. ஆனால், கலாம் அதை ஏற்காவிட்டால் இந்தக் கூட்டணி யாரை ஆதரிக்கும் என்று தெரியலில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன், சுயேச்சையாக துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் போட்டியிடவுள்ளார். ஆனால், எக்காரணம் கொண்டும் அவரை ஆதரிப்பதில்லை என மூன்றாவது அணியின் முக்கிய கட்சியான முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி முடிவு செய்துள்ளது. அக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களின் ஆதரவை இழந்ததால் தான் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அக் கட்சி தோல்வியடைந்தது. இந் நிலையில் இஸ்லாமியர்களின் வாக்குகளை மனதில் வைத்து இந்த முடிவுக்கு அந்தக் கட்சி வந்துள்ளது. அதே போல சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் பாஜக வேட்பாளரை ஆதரிக்கத் தயாராக இல்லை.


இதுதாண்டா அரசியல் :-(

Wednesday, May 16, 2007

அரசியல் சதுரங்கம்.

தற்போது தமிழக அரசியலில் நடந்து வரும் ராஜதந்திரங்கள் (அ)அரசியல் நாடகங்கள் (அ) கேலிக்கூத்துக்களின் பிண்ணனி பற்றிய என் பார்வை.

கலாநிதிக்கு பணம் மட்டுமே குறிக்கோள். மீடியாவின் அனைத்து விதங்களிலும் தானே முதலில் இருக்க வேண்டும் என்பதே கனவு. அத்ற்கு திமுக அரசியல் ஆதரவு தேவை பட்டபொழுது அதனை உபயோகப்படுத்திக்கொண்டார். (அவர் தந்தை திமுகாவில் இருந்தது காரணமாக திமுக ஆதரவு என்பது அவர் ரத்ததில் ஊறியதாக இருக்கும்.) அதே நேரத்தில் அது தன் முன்னெற்றத்துக்கு இடையூராக சமீப காலங்களில் வரத்தொடங்கியதால் திமுக ஆதரவு பிம்பத்தை விட்டு வெளிவர முயன்றார். கூடவே கருணாநிதிக்கு பின் ஏன் தயாநிதி வரக்கூடாது என்ற எண்ணமும் ஸ்டாலினுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் உறுத்தியது. தானாக நடுநிலை என்பதை விட ஒரு சண்டை வந்து பிரிந்தால் தான் அது நம்பப்படும் என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக ஸ்டாலின் எதிர்ப்பு/புறக்கணிப்பு வழியில் இறங்கினார்.. இதனால் ஸ்டாலினை ஓரம் கட்டலாம்.. ஓரளவு ஓரம் கட்டியபின் தயாநிதியை திமுக வாரிசாக முன்னிலைப்படுத்தலாம்/திமுக ஆதரவு பிம்பத்தை உடைக்கலாம் என்பதே அவர் நிலை. கருணாநிதிக்கும் முரசொலி மாறம் மேல் இருக்கும் பற்று காரணமாக தயாநிதியை மத்திய மந்திரியாக்கி அழகு பார்த்தார். மீடியா ஆதரவு தேவை + மாறன் பற்றால் அவர்கள் செய்வதை சகித்துக்கொண்டு அதே சமயம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தார்..
மாறன் சகோதரர்களின் அடுத்தக் கட்டமே இந்த கருத்துக்கணிப்பு + மதுரை சம்பவம் + தயாநிதி ராஜினாமா.

கூடவே.. இது ஒரு நேர்க்கோடான கதை போல் சொல்ல முடியாது என கருதுகிறேன்.. இது பல காலகட்டங்களில் வெவ்வேறு மனநிலைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின் கலவை.

மாறன்ஸ் இதுவரை சரியாக காய் நகர்த்தி வந்தாலும் கருணாநிதி தட்ட வேண்டிய நேரம் பார்த்து (மாறன்ஸ் புரிந்து கொள்ளும்படி) தட்டி விட்டார் என்றே கருதுகிறேன்.

மாறன்ஸ்க்கு தான் அகலக்கால் வைத்தது/சரியாக எடை போடாதது இப்பொது புரிந்து விட்டது. மு.க இருக்கும்வரை இனி அடக்கி வாசிப்பார்கள். அதற்குள் மு.க தேவையான காய்களை நகர்த்தி விடுவாரா? பார்க்கலாம்..
சதுரங்க ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. எதிராளியை குறைவாக எடை போடக்கூடாது என்ற பாடத்தை மாறன்ஸ் புரிந்து கொண்டார்கள்.. பதிலுக்கு காய் நகர்த்துவார்களா இல்லையா என்பதை காலமும் சூழ்நிலைகளும்தான் நமக்கு சொல்லும்.

இப்போதைய சூழ்நிலையில் மாறன் திமுகாவில் இருந்து( மற்றவர்கள் பார்வைக்கு) விலக்கியே வைக்கப்படுவார். ஆனால் தன் MP பதவியை ராஜினாமா செய்யமாட்டார்.. செய்தால் தேர்தலை சந்திக்க வேண்டி வரும்.. திமுகாவுக்கு நெருக்கடி கொடுக்க நினைத்திருந்தால் இதனை செய்திருக்கலாம். திமுகாவை விட்டு மாறனோ சன் மீடியாவை விட்டு திமுகாவோ (உண்மையாக) விலகாது.
நடந்து முடிந்து விட்டதை இரு தரப்பும் தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக்கொல்லும்.. வெளியில் எதிரெதிராக இருப்பதை போன்ற பின்பத்தை ஏற்படுத்தி
1.தன் வியாபாரத்தை விஸ்தாரமாக்கி கொள்வார்கள்.
2.சன்/தினகரன்/தமிழ்முரசு செய்திகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவார்கள். (அது திமுக சாதகமாகவே இருக்கும்).


ஆனால் இந்த அரசியல் விளையாட்டுக்களால் தன் உயிரை இழந்துவிட்ட அந்த மூன்று குடும்பங்களுக்கும் பதில் சொல்பவர் யாரோ???



நண்பர் தேவின் "கலாநிதி மாறன் - நிழல் அரசாங்கம்" பதிவிற்கு நான் போட்ட பின்னூட்டம் இது பதிவாக உங்கள் பார்வைக்கு.

Monday, April 16, 2007

அச்சு கலக்கப் போவது நீங்களா?

என் பதிவை பார்த்ததுமே இருக்கும் ஆணியையெல்லாம் அம்போவென விட்டுவிட்டு வந்து ஆவலுடன் படித்துக்கொண்டிருக்கும் லட்சோப லட்ச வாசகர்களே...

இதோ உங்களுக்கு ஒரு சவால். கைப்பூ எனும் ஒரு மாவீரனை கூட்டமாக கூடி கும்மியடித்து அப்பு கொடுத்து அனுப்பி விட்ட வவாச எனும்
பதிவுலக வாசகர்களின் அங்கமாகிவிட்ட சங்கம் ஒரு போட்டி அறிவித்துள்ளது. என்னா போட்டின்னு பின்னாடி சொல்றேன்..


வக்கப்போர (வைக்கோல் போர்) பாத்துபுட்டு "போர் பல கண்டவன்"னு சொல்லிகிட்டு தளபதியாகிட்ட தேவும் ஆனை கட்டி போரடித்த பொண்ஸும் சேந்து இத ஆரம்பிச்சி ஒரு வருஷம் ஓடிடுச்சாம். சரி என்னாய்யா பண்ணியிருக்கங்கன்னு பாத்தா ஒன்னும் சொல்றாப்புல இல்ல..அணி சேராத அணிகள் மாதிரி கோஸ்டி சேராத அளுங்க நாங்கன்னு சொல்லியே ஒரு கோஸ்டிய சேத்துகிட்டு வரவன் போறவன் எல்லாரையும் சிரிக்க வச்சி அனுப்பி இருக்காங்க. மாசம் ஒருத்தன கூப்டு வச்சி கும்மராங்க..அத பாத்து சுத்தி இருக்கர எல்லாரும் மட்டுமில்ல அந்த பயபுள்ளயும் சேர்ந்தே சிரிக்குது.. சிரிச்சிக்கறது சிரிக்க வக்கிறது இத தவிர வேற ஒன்னும் உருப்படிய செய்யல..


சரி..அது என்னா போட்டி தெரியுமா?? பதிவெழுதி சிரிக்க வைக்க வைக்கிற போட்டியாம்...(நானெல்லாம் பதிவெழுதறதே ஒரு சிரிக்கிர விஷயம்தானேன்னு யாரும் முனுமுனுக்ககூடாது.) அதுக்கு பரிசு வேற கொடுக்கறாங்களாம்.. ஆனா என்ன? காசா கொடுத்தா குவார்ட்டர் அடிச்சிட்டு கவுந்துடுவோம்னு தெரிஞ்சி பொஸ்தகமா கொடுக்கறாங்க.. (ம்ம்.. படிக்கிற காலத்துலேயே நாங்க படிச்சதில்ல..இப்ப மட்டும் படிச்சிடுவோமா என்ன?)


போட்டி முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கு... இதுல எல்லாரும் கலந்துக்கனும்னு கேட்டுக்கறேன்..இவங்க நீங்க அனுப்பர காமடி பதிவுல எத எடுக்கறது..எத்க்கு பரிசு கொடுக்கறதுன்னு தெரியாம முழிக்கனும்.. திணரனும்.. சொல்லிபுட்டேன்... அந்த பதிவுகள படிச்சி எல்லாரும் சிரிக்கனும்.. சரியா?????


நெக்ஸ்ட் மீட் பன்னுவோம்.. வர்ட்டா?



மேலும் விபரங்களுக்கு :
http://vavaasangam.blogspot.com/2007/04/blog-post_6576.html
எழுத ஆரம்பிக்கும் முன் முக்கியமாக விதிமுறைகளைகளை படிக்கவும்.

இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் வவாசவுக்கு என் இனிய வாழ்த்துக்கள். மேலும் பல ஆண்டுகள் இந்த சங்கத்தின் சேவை தொடரவேண்டும் என விரும்புகிறேன்.அதற்கு வாசகர்களாகிய நாம் நம்முடைய ஆதரவை தொடர்ந்து வழங்குவோம் எனவும் நிச்சயமாக நம்புகிறேன்.


வவாச,
வாழ்க வளர்க.

Thursday, April 12, 2007

ரஜினி/சிவாஜி - சில கேள்விகள் - என் பதில்கள்.

சமயம் கிடைக்கும்பொழுதெல்லாம் ரஜினி மீது புழுதி வாரி தூற்றுவதும் அவர் மீதோ இல்லை திரைத்துறையின் மீதோ அக்கறை என்ற போர்வையில் அவரை மட்டம் தட்ட முயற்சிப்பதும் சிவாஜி படம் தோல்வியடைய வேண்டும் என அங்கலாய்ப்பதும் நடக்கிறது. அவற்றில் ரஜினி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அல்லது கேட்கப்படும் கேள்விகளுக்கான என் பதில்களே இந்த பதிவு.

1. வயதான காலத்தில் டூயட் பாடுகிறார்
இதனை சொல்பவர்களை பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது.அவர் என்ன கல்யானத்துக்கு பெண்ணா கேட்கிறார்? வயதை பற்றி கேள்வியெழுப்ப? இது ஊடகம். இங்கு திரையில் தெரிவதுதான் வயது. பார்ப்பவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா இல்லையா என்பதுதான் முக்கியம். அவர்கள் ஒப்புக்கொள்கையில் 20 வயது இளைஞன் 60 வயதுக்காரராகவும், 60 வயது பெரியவர் 20 வயது இளைஞனாகவும் நடிக்கலாம். இதில் என்ன தவறு? என்ன பிரச்சினை??? சத்தியராஜ் பெரியார் படத்தில் இளவயது பெரியாராகவும் வருகிறாராமே.. அது தவறா? அதை விடுங்கள். திரைத்துறையில் வெற்றி பெற்ற பல நடிகர்களை பாருங்கள். கமல்,அமிதாப், ஷாருக், சிரஞ்சீவி, மம்முட்டி,மோகன்லால், இப்படி அடுக்கிகொண்டே போக முடியும். இவர்கள் அனைவரும் இளைஞர்கள் அல்லவே? ஹீரோவாக நடிக்ககூடாதா? டூயட் பாடக்கூடாதா? ஸ்ரீதேவி எவ்வளவு காலம் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தார்?

அது மட்டுமின்றி எனக்கு தெரிந்தவரை அவர் ஒருவர்தான் வெளியில் வேஷம் போடாமல் தன் நிஜ வயதை மறைக்காமல் இருப்பவர்.படங்களில் மட்டுமே வேஷம் போடுபவர். அவரை பார்த்து இப்படி சிறுபிள்ளத்தனமான கேள்விகள் எழுப்புபவர்களை பற்றி மேற்கொண்டு என்ன சொல்ல???

2. ரஜினியின் அரசியல் ஈடுபாடு/அணுகுமுறை
ரஜினி அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை.(விருப்பமில்லை என்பதை தகுதியில்லை என சொல்வதாக அர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டாம்). அதே போல் அவர் வரப்போகிறேன் என பூச்சாண்டி காட்டுவதும் எனக்கு பிடிக்கவில்லை. அதே நேரத்தில் இதை ஒரு பெரிய குற்றமாக பேசுவதை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. அரசியல் என்பது ஆட்சி அதிகாரம் மூலம் நன்மை செய்ய ஒரு வாய்ப்பு என்பது பெயரளவில் கூட இல்லை. அரசியல் செய்ய நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. பல குள்ளநரித்தனக்களையும் சமாளிக்க, எதற்கும் எப்பொதும் அடுத்தவரை குறைகூற, தன்னையும் தன் கட்சியையும் தற்காத்துக்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும். இதீல் எதுவும் ரஜினிக்கு ஒத்துவரும் என என்னால் நம்பமுடியவில்லை. அப்படிப்பட்ட அரசியலில் நுழைவதற்கு தயக்கம் காட்டுவது தவறு அல்ல. அரசியலில் அவரின் செயல்பாடுகள் நிச்சயமாக சிறப்பானதாக இல்லை. ஆனால் குற்றம் சுமத்தும் அளவுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. அவர் அரசியலுக்கு வருவதாக சொன்னதால் இப்பொழுது என்ன கெட்டுப்போய் விட்டது? ஏன் இந்த கூச்சல்? ஏற்கனவே ஒரு பதிவில் நான் சொன்னது கீழே:
//அவர் அரசியலுக்கு வருவதும் வராததும் அவர் விருப்பம்...அப்படியே அவரை நம்பி காத்திருந்தாலும், பாதிக்கப்பட்டதாக சொல்வது அவர் ரசிகர்கள்தானே?உங்களுக்கு ஏன் இந்த நீலிக்கண்ணீர்?//



3.ரஜினி தரமான படங்களில் நடிக்க வேண்டும்.
திரைப்படத்துறையை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு நடிகர்/இயக்குனரிடம் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டோம். ரஜினியை சுற்றி ஒரு வட்டம் போடப்பட்டுவிட்டது. அதனை தாண்டுவது எளிதல்ல. (ஒரு சிறிய எடுத்துக்காட்டு: ஷங்கர் காதல் படத்தை தான் இயக்கி இருந்தால் தோல்வியடைந்து இருக்கும் என சொன்னது) தாண்டும் ஆசை அவருக்கும் இருக்கும் என நான் நம்புகிறேன். ஆனால் இது ஒரு சிலரின் தனிப்பட்ட ஆசை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல.. பலரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. ரஜினி படம் தோல்வியடைந்தால் அதன் பாதிப்பு சாதாரணமானதல்ல. பலரை பாதிக்கும்.
நான் சொல்வது ஆசை வேறு. நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் வேறு என்று..ரஜினி படங்களின் தரம் மேலும் உயரவேண்டும் எனவே நானும் விரும்புகிறேன். பல ரசிகர்களுக்கும் இந்த ஆசை இருக்கும் என்றே நம்புகிறேன்.

அதே சமயம் நாம் கலை என்பது ரசிப்பவர்களுக்கு அவர்கள் விருப்பத்தை கொடுப்பதும்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்படி கொடுப்பதில் ரஜினிக்கு நிகர் யாருமில்லை என்பது நிதர்சனம்.

4.சிவாஜியால் தரம் கெட்டுவிடும்
சிவாஜி படம் வெளிவருவதற்கு முன்பே யூகங்களின் அடிப்படையில் சொல்லப்படும் குற்றச்சாட்டு இது. இந்த படம் வருவதால் திரையுலகம் கெட்டுப்போய்விடும். 5 வருடம் பின்னோக்கி போய்விடும் என்பது எந்த விதத்திலும் சரியான வாதமல்ல.. சிவாஜி வெற்றிபெற்றால் சேரனும் பிரகாஷ்ராஜும் மசாலா படம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள் என கூறுகிறீர்களா?? இல்லை மக்கள் அது போன்ற படங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டர்கள் என சொல்கிறீர்களா? VCDயில் படம் பார்த்தவர்களை திரையரங்குகளுக்கு மறுபடியும் அழைத்து வந்து திரைத்துரைக்கு பெரும் பேறு செய்த படம் சந்திரமுகி. இதையெல்லாம் மறந்து விட்டு பேசுவது துரதிஷ்டமே.. இதனை பற்றி சிவாஜி படம் வெளிவந்த பின் பேசுவது மட்டுமே சரி.

5.ரஜினிக்கு நடிக்கத்தெரியாது.

இதற்க்கெல்லாம் பதில் சொல்லக்கூடகூடாது.. நடிப்புத்துறையில் 30 ஆண்டு காலம் கொடிகட்டி முடிசூடா மன்னனாக திகழும் ரஜினியை பர்த்து நடிக்கத்தெரியாது என்பதை பார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது.மேற்கொண்டு பேச எதுவுமில்லை.

மேற்கொண்டு ஏதுவும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. விவாதிக்கலாம்..சரியான முறையில்.


ரஜினிக்கும் சிவாஜிக்கும் எதிராக எழுதப்பட்ட பல பதிவுகளை பற்றி:

அப்படிப்பட்ட பதிவு ஒன்றில் ராஜ்குமார் என்ற ஒரு வாசகர் இட்ட பின்னுட்டத்தை 100% சரி என நான் நம்புவதால் அதையே அந்த பதிவுகளை பற்றிய என் பார்வையாக வைக்கிறேன்.

"ரஜினி என்ற தனிமனிதனின் புகழ் மீதான காழ்புணர்ச்சியை, அறிவு ஜீவித்தனமான வாதங்களை முன் வைத்து வெளிப்படுத்தியுள்ளீர்கள்.இவ்வாதங்களில் துளிக்கூட நேர்மை கிடையாது.யூகங்களிம் அடிப்படையில், சினிமா வரலாற்றையும் முழுமையாக பிரதிபலிக்காமல் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை கண்டிப்பாக பரபரப்பு ஏற்படுத்த எழுதப்பட்டுள்ளதே தவிர, வேறு எதற்காகவும் இல்லை"


நான் பார்த்தவரை ரஜினி ரசிகர்கள் நல்ல படங்களை பற்றி பாரட்ட தவறியதே கிடையாது.யாரையும் தவறாக பேசியது கிடையாது. ரஜினியை பற்றி தவறாக எழுதி சீண்டி விடும்நேரங்களில் சிலது சொல்லி இருக்கலாம். அவ்வாறு சீண்டி விடுவதை கோழைத்தனமாகவே நான் நினைக்கிறேன். அக்கரையுடன் எழுதப்படும் பதிவுகள் என்பது உண்மையானால் அது சரியான விவாதக்களத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும். அப்படியில்லமல் ரஜினியை பற்றி தவறாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றிவிட்டு நான் அக்கரையுடன் சொல்கிறேன் என்பது சரியா??

சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் நடிப்பின் மூலம் ஈர்த்துள்ள ரஜினி ஒரு மூன்றெழுத்து மந்திரம்தான். அசைக்க முடியாத ஒரு சக்திதான். உயர்ந்த இடத்தில் இருந்தாலும் துளியும் கர்வமின்றி எளிமையாக இருப்பவர். ஒரு கலைஞனை தாராள மனதுடன் பாரட்டுவது ஊக்கப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. இதுவும் அனைவருக்கும் தெரிந்தது. இருந்தும் ஏன் அவர் மேல் இந்த கோபம்? பாபா தொல்வியடைந்ததும் ரஜினி சகாப்தம் முடிந்தது என நம்பியதில் மண் விழுந்ததால் வந்த எரிச்சலா????

Monday, March 26, 2007

சொந்த செலவுல சூனியம்...

இந்த வார ஸ்டார் சாரி சாரி..சூப்பர் ஸ்டார் தேவோட மடல்ன்னாலே ஒருவித எதிர்பார்ப்போட திறந்து பாக்குறது வழக்கம்.. ஆனா அதுல ஆப்பையும் அட்டாச் பன்னி அனுப்புவருன்னு தெரியாம போச்சு... 3 நாளைக்கு முன்னால வந்த மின்மடல்தான் அது.. ஆனா அப்பகூட அது என்ன ஆப்புன்னு புரியல.. சரின்னு அவர்கிட்டேயே என்னல இதுன்னு கேட்டேன்.. அதுவா.. அது "நான் ஒரு கிறுக்கு"ன்னு சொல்லனும்.. சும்மா சொன்னா பத்தாது. அதுக்கு சப்போர்டிங்கா 5 சாம்பில் கொடுக்கனும்.. அத படிக்கிறவங்க ஆமா இவன் ஒரு கிறுக்குதான்னு ஒத்துக்கனும்.அவ்வளோதான் அப்ப்டின்னாரு. என்னய்யா இது..சரியா புரியலியே.. அது இருக்கட்டும்.. நான் ஒரு கிறுக்குன்னு உனக்கு தெரிஞ்சுது..சரி..அத ஏன்யா ஊருக்கு வேற சொல்லனும்னு கேட்டா நாம எல்லாம் ஒரு குரூப்பாத்தாம்லே கெளம்பி இருக்கோம்.. நீ தனி ஆள் இல்ல, அச்சப்படாம ஆடுன்னு சொன்னாரு.இன்னும் கொஞ்சம் தெளிவா விசாரிச்சப்புரம்தான் தெரிஞ்சது..கைப்பூ ரொம்ப நாளா எஸ் அகிட்டதால ஆப்பெல்லாம் பெண்டிங்ல இருக்காம்.. அத ஆளுக்கு அஞ்சு அஞ்சா பிரிச்சி அவங்கவங்களே எடுத்து தனக்குத்தானே வச்சிக்கிற விளையட்டாம். சொந்த செலவுல சூனியம்னா என்னான்னு புரியாதவங்களுக்கு புரிய வைக்கிற மாதிரி விளையாடனுமாம். விட்டா யாரு பெரிய கிறுக்குன்னு சார்வேசன் சார்வே எடுப்பாரு போல...அதுக்கு வாடா ராசான்னு அன்போட(ஆப்போட) கூப்பிடுற மடல்தான் அது.

சரி..ஆட்டத்த ஆரம்பிக்கிறேன்..

1. இந்த கிறுக்குத்தனமா யோசிக்கிறது நமக்கு கை வந்த கலைங்க. சின்ன வயசுல யோசிக்கிறது எல்லாமே அப்படித்தான் இருக்கும்.. ஒரு காலத்துல என்ன சுத்தி இருக்கர உலகம் எனக்காகவே உருவாக்கப்பட்டதோன்னு தோனும்..என்னை தவிற எல்லாருமே எனக்காக நடிக்கிறாங்களோன்னு தோனும்..இது போலவே எல்லாருக்கும் தனித்தனி உலகம் உறுவாக்கப்பட்டு இருக்கோன்னு வேற தோனும்.. இந்த மாதிரி யோசிச்சி யோசிச்சி மண்ட காஞ்சதுதான் மிச்சம்.. ஒரு பதிலும் கிடைக்கல.. போகப்போக இந்த மாதிரி யோசிக்கிரத விட்டுட்டேன்.

2. புத்திசாலித்தனமா காமிச்சுக்க நினைச்சி பல்பு வாங்கறதும் ஓரளவு பழக்கம்தானுங்க.. இப்படித்தான் 5 வருஷத்துக்கு முன்னால முதல் தடவையா பெங்களூர் வந்துட்டு ஆட்டோவுல போகும்போது (சென்னை அனுபவம்) அவன் ஊர் சுத்தி கூட்டிகிட்டு போயிடுவானோங்கர சந்தேகத்துல எந்த வழியா போறீங்கன்னு கேட்டேன்.. அதுக்கு அவன் சொன்ன பதில் : "உங்களுக்கு எந்த வழியா போகனும்?"

3. கோபம் எனக்கு ரொம்ப அதிகமா வரும்.. இது weirdaa இல்லயான்னு தெரியல.. ஆனா அடுத்தவங்க சாதாரணமா எடுத்துக்கர பல விஷயங்கள் எனக்கு கோபத்தையும் எரிச்சலையும் கொடுக்கும். கேனத்தனமா டிரபிக்க ஹேண்டில் பன்ற டிரபிக் கான்ஸ்டபில் முதற்கொண்டு பொதுவாக தேவையில்லாத/அடுத்தவரை பற்றி கவலைப்படாத/எதனையும் grantedஆக எடுத்துக்கிற எல்லா விஷயத்துலயும் கோபம் அதிகமா வரும்.அந்த கோபத்தால பயன் இல்லன்னு தெரிஞ்சாலும் மனது நீண்ட நேரத்துக்கு ஆறவே ஆறாது.

4. சிறு வயதில் பயம் அதிகம். சில விஷயங்கள எதிர்கொள்ளவே தைரியம் கிடயாது.. இப்படித்தான் ஒரு முறை வீட்டுக்கு பக்கத்தில் உள்ள முனிசிபல் ஆபிசில் பசங்களுடன் விளைடாடும்பொழுது ஏறத்தெரியாமல் மரம் ஏறி கீழே விழுந்தேன்.. விழும்பொழுது உடைந்து இருந்த மரக்கிளையில் கால் மாட்டி அந்தரத்தில் தொங்கி கால்சதையின் பெரும்பகுதி கிழிந்து விட்டது.. அதை வீட்டில் சொல்ல பயம்.. டாக்டரிட்ன் கூட்டிப்போய் என்ன செய்வார்களோ.. தாங்க முடியுமா என பயந்துகொண்டு 2 நாட்கள் வீட்டில் சொல்லாமலேயே (கடுமையான ஜூரம் வேறு) இழுத்துப்போர்த்திக் கொண்டு படுத்துக்கிடந்தேன், என் அண்ணன் என் கால்களில் இருந்த ரத்தத்கறையை கண்டுபிடிக்கும்வரை.

5. இன்னும் முடியலியா.. சரி.. இந்த ஐஸ்கிரீம் இருக்கு பாருங்க. அத நல்லா கொழச்சி தன்னியாட்டம் ஆக்கி சாபிடுறது எனக்கு பிடிக்கும். :-) என்ன
பப்ளிக்கா அப்படி சாப்பிட முடியாது.. :-(

அப்பா.. ஆடி முடிச்சாச்சு.. என்னாது.. இன்னும் அஞ்சு பேர நான் கூப்பிடனுமா????

சரி..எனக்கு தெரிஞ்ச கிறுக்கங்க அல்லது முட்டாப்பசங்க இவங்கதான்.. அவங்க அவங்கள பத்தி தனியா பதிவு பொட்டு சொல்லனும்னு தேவையில்லன்னு நினைக்கிறேன்.

1. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்
2. அரசியல் கட்சிகளின் உண்மையான தொண்டர்கள்
3. நேர்மையாக நடக்க நினைக்கும் அதிகாரிகள்.
4. _________
5. _________
4ம் 5ம் உங்க சாய்ஸ்..fill in the blanks.. யாருன்னு சொல்லுங்க..

Wednesday, March 07, 2007

DD Vs Nimbus

ஏற்கனவே நொந்து போய் இருக்கறவங்கள நானும் சேர்ந்து தொல்ல பண்ண வேணாம்கற நல்லெண்ணத்துல(??!!) நம்ம கடைய பூட்டி சாவிய எங்கிட்டோ போட்டு ரொம்ப நாள் ஆச்சுங்க.. மத்த கடைய அப்பப்ப பாத்து ஏதாவது சில்லறையா வாங்கறதோட சரி.. அதுவும் இப்ப ஒரு கடையில 30 க்கு மேல பப்ளிக்கா வாங்க கூடாதுன்னு வேற சொல்லிட்டதால, நல்லாதா நாலு பெரு அந்த 30அ வாங்கட்டும்னு விட்டுடறதும் உண்டு..

ஆனா பாருங்க பூட்டியிருந்த நம்ம கடைக்கும் நெத்து ஒருத்தர் விஸிட் கொடுத்தாரா... இன்னைக்கு செய்தியில கேட்ட ஒரு விஷயம் வேற எரிச்சல கிளப்பிடுச்சா.. சரி இத பத்தி நம்ம ஆளுங்க என்னா நினைக்கிறாங்கன்னு கேட்டுடலாம்னனு தோனுச்சு.. அதான் தேடுடா சாவிய... தொரடா கடையன்னு கைப்பிள்ள கணக்கா கிளம்பிட்டேன்.

சரி.. விஷயத்துக்கு வரேன்..இதான் அது.

Handicapped by the sports Ordinance biting into their advertising revenues, Nimbus today threatened to pull out of its Rs 2,714 crore five-year telecast deal with the Board of Cricket Council of India (BCCI)

தற்போதைய பிரச்சினை தூர்தர்ஷனின் உலகப்கோப்பை ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், இந்தியா தவிர மற்ற சில நாடுகளிலும் தெரியப்போவதுதான். இது nimbusக்கு கடுமையான வருமான இழப்பை கொடுக்கும்.

ஆரம்பத்தில் இருந்தே இதில் நமது தூர்தர்ஷன் செய்வது கொஜ்சம் கூட சரியில்லை என்பது என் கருத்து. இன்றைய காலங்களில் கிரிக்கெட் என்பது பார்வையாளரை பொறுத்தவரைதான் விளையாட்டு. ஆனால் அதனை ஒளிபரப்புபவர்களுக்கு அது ஒரு வியாபாரம். மிக கடுமையான போட்டியுள்ள ஒரு வியாபாரம். 50 ஓவர் விளையாடவேண்டிய ஒரு அணி 48 ஓவரில் ஆட்டமிழந்தாலே (அந்த 10 நிமிடத்தில் காட்டவேண்டிய விளம்பரங்களால்) அதனால் ஏற்படும் வருமான இழப்பை பற்றி கவலைப்படும் அளவுக்கு.

அப்படிப்பட்ட வியாபாரக்களத்தில் தூர்தர்ஷன் முதலீடு செய்யாமலேயே அடுத்தவனின் லாபத்தில் ஒரு கனிசமான பங்கை எடுத்துக்கொள்ள முயல்வதாகவே தோன்றுகிறது. மக்களின் நலன் கருதி என்ற பெயரில். இது சரியா? இதற்காக ஒரு சட்டமே இயற்றியுள்ளது எந்த விதத்தில் நியாயம்?
கடந்த காலங்களில் போட்டி நடக்கும் ஒரு வாரத்துக்கு முன் யாராவது பொதுநலமனு ஒன்றை போட்டு அதன் மூலம் நீதிமன்றமும் DDயுடன் ஒளிபரப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும்என்ற தீர்ப்பை வழங்கும். தனியார் தொலைகாட்சிகளுக்கு நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. ஆனால் DDயோ போட்டியைவிட அதிகமாக விளம்பரங்களை ஒளிபரப்பி நல்ல லாபம் பார்க்கும். (ஒரு ஓவரின் முதல் பந்தையும் கடைசி பந்தையும் பார்க்கவே முடியாது.)

இப்போது இந்தியா பங்கேற்கும் எல்லா போட்டியையும் யார் ஒளிபரப்பு உரிமை பெற்றிருந்தாலும் அவர்கள் DDக்கு தங்கள் ஒளிபரப்பை கொடுக்க வேண்டும் என ஒரு சட்டமே இயற்றிவிட்டார்கள். இதில் DDக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 3/4ஐ அந்த தனியார் தொலைக்காட்சியிடம் DD செலுத்தும். மீதி 1/4 DDக்கு. ஆனால் மொத்ததில் தனியார் தொலைக்காட்சிக்கு பெரும் இழப்பு இது.

வேண்டுமெனில் DDயே நேரடியாக ஒளிபரப்பு உரிமையை பெற வேண்டியதுதானே? அதை ஏன் அவர்கள் செய்வதில்லை? அதேபோல் தனியார் தொலைக்காட்சிகளும் ஏன் DDயை தனியாக விளம்பரங்கள் ஒளிபரப்ப ஒப்புக்கொள்கின்றன என்பதும் எனக்கு புரியவில்லை. தாங்கள் ஒளிபரப்புவதை அப்படியே DD ஒளிபரப்ப வேண்டும் விளம்பரங்களையும் சேர்த்து என கூறுவதுதானே? அதன் மூலம் இவர்கள் விளம்பரங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும். யார் எதில் பார்த்தாலும் ஒன்றுதான். வருமான இழப்பு ஏற்படாது என தோன்றுகிறது. இதனால் DDக்கு வருமான இழப்பு கொஞ்சம் ஏற்படலாம். ஆனால் மக்களுக்கு தொண்டு செய்வதற்காக அது அதனை ஒப்புக்கொள்ளும் என நம்புவோமாக :-)

எப்படி பார்த்தாலும் DD செய்வதும் புதிய சட்டமும் தர்மமாகாது என நினைக்கிறேன்.. உங்கள் கருத்து????