நண்பர் ஜோ அவர்களின் பதிவில் இந்த வரிகளை கண்டேன்..
//எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிற அளவுக்கு மத நம்பிக்கை கிடையாது//
இது சரியான மற்றும் தேவையான அணுகுமுறை என்றே தோன்றுகிறது..அவரின் வரிகள் என்னை யொசிக்க வைத்தன.. அதன் விளைவே இந்த பதிவு.. என் மனதுக்கு தோன்றியவைகளை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.. இதுதான் சரி என்றோ, தவறு என்றோ நான் கூறவில்லை.. ஏனெனில் நான் சரி என்று நினைத்த பலவற்றை தவறு எனவும் தவறு என நினைத்த சிலவற்றை சரி எனவும் பின்னாளில் முடிவு செய்து இருக்கிறேன்.. இன்றைய என் நம்பிக்கை நாளை பொய்க்கலாம். இது அனைவருக்கும் பொருந்தும் என்பது என் எண்ணம். அதே போல், நான் என்றும் மதம் சார்ந்த பதிவுகளையோ அதன் சர்ச்சைகளிலோ சிக்க கூடாது என நினைத்தவன்.. இருந்தாலும் இந்த பதிவு நல்ல முறையில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் இதனை உங்கள் மனதுக்கு கொடுக்கிறேன்.
நானும் யோசித்து பார்க்கையில் இது போன்றே பல தருணங்களில் உணர்ந்து இருக்கிறேன்.. பல நேரங்களில் நான் ஆத்திகனாகவும், நாத்திகனாகவும், இருந்து இருக்கிறேன். கடவுள் இருக்கிறாரா அவர் நல்லவரா? என்றெல்லாம் பல முறை கேள்விகள் எழுந்ததுண்டு.(அதற்கு முக்கிய காரணம் பிறப்பினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வேற்றுமைகள். ஒரு முறை என் பெற்றோரின் திருமண நாளை ஒரு ஆதரவற்றோர் விடுதியில் உள்ளவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டாடினோம்.. அன்று நான் சந்தித்த குழந்தைகளின் நிலை என்னை சாட்டையால் அடித்தது போல் இருந்தது... நான் என்ன நன்மை செய்ததால் இன்று அவர்களை விட சற்று வசதியான இடத்தில் இருக்கிறேன்? என்ன தீமை செய்ததால் அவர்கள் மற்றவரிடம் உணவுக்கும் மற்ற அடிப்படை வசதிகளுக்கும் கையேந்தும் நிலையில் இருக்கிறார்கள்? எனக்கு கிடைத்த பதில் நான் பிறந்த இடமும் அவர்கள் பிறந்த இடமும் தவிர வேறு காரணம் இருப்பதாக தோன்றவில்லை. இது பற்றி மேலும் பேசினால் பதிவு வேறு திசைக்கு திரும்பும் என்பதால் இதனை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்)
அது போலவே, கடவுள் இருக்கிறாரா/நல்லவரா என்று எத்தனை கேள்விகள் எனக்குள் தோன்றுகிறதோ கிட்டதட்ட அதே அளவு கேள்விகள் கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதரவாகவும் தோன்றுகின்றன.
எதனையும் அறுதியிட்டு முடிவுக்கு வர முடியாததுதான் இதன் முடிவு. எந்த ஒரு மனிதனையும் மனிதனாக மதிக்க வேண்டும் என்பதே என்றும் என் நிலைப்பாடு..
மதம் ஒவ்வொருவருக்கும் அவரது (அவர்களால் கட்டுப்படுத்த முடியாத)பிறப்பினால் அடையாளமாகிறது.. உலகில் ஒரே ஒரு மதம்தான் உண்மை என்றால், மற்ற மதத்தில் மனிதர்கள் தோன்ற காரணமான அந்த கடவுளே குற்றவாளி.
இதனை பிடித்துக் கொண்டு கொஞ்சம் மேலே போனால், மற்ற மதங்கள் ஏன் தோன்றின? தோன்ற வேண்டிய அவசியம் என்ன? ஏன் கடவுள் அதனை கட்டுப்படுத்த வில்லை. ஏன் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பதில்லை?(ஒரு மனிதனை உறுவாக்குவது அவனுடைய சூழ்நிலைகளும் அவன் சந்திக்கும் மனிதர்களும்தான். அதனையும் அவன் கட்டுப்படுத்த முடிவதில்லை.)
இது போல இன்னும் பற்பல கேள்விகள் பிறக்கின்றன..
ஆனால் ஒன்று.. மதங்களின் (சரியான) பழக்கங்களை பின்பற்றுகையில் மனிதன் தவறுகள் செய்யாமல் தன்னை காத்துக்கொள்கிறான். எப்படி சட்டங்கள் ஒரு குடிமகனை தவறுகள் செய்தால் தண்டனை உண்டு என பயமுறுத்தி அவன் தீய வழியில் செல்லாமல் இருக்க பயன்படுகிறதோ அது போல. ஆகவே மனித குலத்திற்கு பாதை தெரிந்து நடக்க மதங்கள் தேவை. இந்த நிலையிலேயே மதங்களுக்கான மதிப்பு இருக்க வேண்டும்.
அடுத்தவர் மதத்தினை, நம்பிக்கைகளை மதிக்க கூடிய மனநிலை காலத்தின் கட்டயமாகிறது.. அதே நேரத்தில் அந்த நம்பிக்கைகள் மற்ற மனிதரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். தவறாக இருப்பின் விவாதிக்ககூடிய, தவறு இருந்தால் மாற்றிகொள்ளக்கூடிய சூழ்நிலை நிலவ வேண்டும்.
சிறு வயதில் படித்த இந்த வரிகள் ஞாபகம் வருகிறது..
"மதம் என்பது குளிர் காலத்தில் எரியும் நெருப்பு போன்றது..தூர விலகினால் குளிரும்.. மிக மிக அருகில் நெருங்கினால் எரித்து விடும்."
Saturday, October 07, 2006
Subscribe to:
Post Comments (Atom)
54 comments:
உலகில் ஒரே ஒரு மதம்தான் உண்மை என்றால், மற்ற மதத்தில் மனிதர்கள் தோன்ற காரணமான அந்த கடவுளே குற்றவாளி// :-))))))))))))))
அனானி பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்பட மாட்டாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதம் என்பது கண்டிப்பாக தேவை இல்லை என்பது தான் என் கருத்து.
நல்ல பதிவு.
ஓசை, உலகில் எந்த மதமும் நூற்றுக்கு நூறு தூய மதமல்ல என்பது என் கருத்து. ஆகையால் மதத்தை விட இறைவன் பெரியவர். இறைவனை விட சகமனிதன் பெரியவன். இதுதான் என் கருத்து.
அனானி பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்பட மாட்டாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.//
உங்களின் இந்த செயல்பாடு பிடிக்கிறது. நானும் அதை செயல்படுத்தி வருகிறேன். ஆனால், அந்த "வருத்தத்துடன்" என்ற சொல் தேவையா?
//ஏனெனில் நான் சரி என்று நினைத்த பலவற்றை தவறு எனவும் தவறு என நினைத்த சிலவற்றை சரி எனவும் பின்னாளில் முடிவு செய்து இருக்கிறேன்.. இன்றைய என் நம்பிக்கை நாளை பொய்க்கலாம்.//
ஓசை, இந்த கூற்றோடு என்னை தொடர்பு படுத்தி என்னால் பார்க்க முடிகிறது.
//எப்படி சட்டங்கள் ஒரு குடிமகனை தவறுகள் செய்தால் தண்டனை உண்டு என பயமுறுத்தி அவன் தீய வழியில் செல்லாமல் இருக்க பயன்படுகிறதோ அது போல. ஆகவே மனித குலத்திற்கு பாதை தெரிந்து நடக்க மதங்கள் தேவை. இந்த நிலையிலேயே மதங்களுக்கான மதிப்பு இருக்க வேண்டும்.
அடுத்தவர் மதத்தினை, நம்பிக்கைகளை மதிக்க கூடிய மனநிலை காலத்தின் கட்டயமாகிறது.. அதே நேரத்தில் அந்த நம்பிக்கைகள் மற்ற மனிதரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். தவறாக இருப்பின் விவாதிக்ககூடிய, தவறு இருந்தால் மாற்றிகொள்ளக்கூடிய சூழ்நிலை நிலவ வேண்டும்.//
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். மதத்தினைக் குறித்த எனது நிலைபாடும் இதுவே.
உஷா, வருகைக்கும், புன்சிரிப்பிற்கும் நன்றி. அது பதிவை ரசித்ததற்கான அடையாளமாக எடுத்துக் கொள்கிறேன். :-)
குமரன் எண்ணம், ராகவன்,
உங்கள் கருத்துக்கள் உங்களுக்கு. எனக்கு அதில் முழு உடன்பாடு இல்லையென்றாலும் நான் உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். அதே நேரத்தில் நீங்கள் சொல்பவை தான் சரி என நானும் ஒப்புக்கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்பினால் நாம் விவாதிக்கலாம். விவாதிக்க நம்மில் யாருக்காவது விருப்பம் இல்லையெனில் அவரவர் நம்பிக்கையோடு அவரவர் (அடுத்தவரை பாதிக்காத) தன் பாதையில் செல்லலாம். :-)
//மதம் என்பது கண்டிப்பாக தேவை இல்லை என்பது தான் என் கருத்து. //
குமரண் எண்ணம்,
தேவை என்பதே என் கருத்து. காரணங்களை பதிவின் கடைசி இரு பத்தியில் சொல்லி இருக்கிறேன்.. தனி மனிதனுக்கு வேண்டுமெனில் ஒரு குறிப்பிட்ட முதிர்ச்சிக்கு பின் மதம் தேவை இல்லாமல் இருக்கலாம்.
ராகவன்,
வருகைக்கு நன்றி.
//ஓசை, உலகில் எந்த மதமும் நூற்றுக்கு நூறு தூய மதமல்ல என்பது என் கருத்து. //
இது சர்ச்சைக்கு உரிய கருத்து. பலருக்கும் தன் மதம் 100/100 சரி என்ற எண்ணம் இருக்கும்.. (அது பொய்க்குமானால் அது அவர்களின் குற்றமுமல்ல.) அவ்வாறு இருப்பது தவறு இல்லை என்பதே என் வாதம்.
//ஆகையால் மதத்தை விட இறைவன் பெரியவர். இறைவனை விட சகமனிதன் பெரியவன். இதுதான் என் கருத்து. //
இது ஒரு விதத்தில் சரி என்று எனக்கு தோன்றுகிறது.
மதத்தினைக் குறித்த எனது நிலைபாடும் இதுவே.
தருமி ஐயா,
தங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.. தங்களின் நான் ஏன் மதம் மாறினேன் எனக்கு பிடித்த ஒரு கட்டுரை. (ஆனாலும், இன்னும் அனைத்து பகுதிகளும் படிக்க வில்லை.:-( )
//உங்களின் இந்த செயல்பாடு பிடிக்கிறது. நானும் அதை செயல்படுத்தி வருகிறேன். ஆனால், அந்த "வருத்தத்துடன்" என்ற சொல் தேவையா? //
சமீப காலங்களில் நடக்கும் அனானி ஆட்ட்டங்களை கண்ட வெறுப்பினால் எழுதியது அந்த வாக்கியம்.. ஆனால், வருத்தத்துடன் என கூறியது , நல்ல கருத்துக்கள் கூற நினைக்கும் பிளாக்கர் ID இல்லாத மிகச்சிலரில் யாராவது கருத்து சொல்ல நினைத்தால் அவர்களுக்கு அனுமதி அளிக்க இயலாததையே. அப்பொழுதே அடைப்பு குறியில் சொல்ல நினைத்தேன்.. வழக்கமான சோம்பேறித்தனத்தால் சொல்ல வில்லை. :-)
பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்.
//ஓசை, இந்த கூற்றோடு என்னை தொடர்பு படுத்தி என்னால் பார்க்க முடிகிறது.//
கைபுள்ள,
பதிவின் வரிகளை சுட்டிக்காட்டி கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. பலருக்கும் இது பொருந்தும் என்பதே என் எண்ணம்
//நன்றாக எழுதியிருக்கிறீர்கள். //வாழ்த்திற்கு மிக்க நன்றி.
//மதத்தினைக் குறித்த எனது நிலைபாடும் இதுவே. //
இளா, கைப்புள்ள, தங்கள் கருத்து என்னுடன் ஒத்துப்போவது மகிழ்ச்சி அளிக்கிறது..
மனதின் ஓசை,
நீங்க இந்தப் பதிவைக் கொஞ்சம் தயக்கத்துடன், பயந்து பயந்து எழுதி இருப்பதாகத் தோன்றுகிறது. பயந்து என்பது - வலையுலக "அன்பர்"களுக்கு அல்ல, உங்களுக்கே பயந்து. நாளைக்கோ மறுநாளோ இதில் உள்ள எதையாவது நாமே மறுத்துப் பேசவேண்டி வந்துவிடுமோ என்று பயந்து...
எப்படியும் நல்ல பதிவு.
//ஒரு மனிதனை உருவாக்குவது அவனுடைய சூழ்நிலைகளும் அவன் சந்திக்கும் மனிதர்களும்தான்//
- இத்தனை மதங்களை உருவாக்கியதும், அந்தந்த காலங்களில் வாழ்ந்த மனிதனும்,அவன் சந்தித்த சூழ்நிலைகளும், மற்ற மதங்களும் தான் :)
//நீங்க இந்தப் பதிவைக் கொஞ்சம் தயக்கத்துடன், பயந்து பயந்து எழுதி இருப்பதாகத் தோன்றுகிறது.//
உண்மை. :-)
//பயந்து என்பது - வலையுலக "அன்பர்"களுக்கு அல்ல, //
மாற்றி சொல்கிறீர்கள். நான் பயந்தது வலையுலக அன்பர்களுக்காக என சொல்லலாம்.. அப்படி சொல்வதை விட தெளிந்த நீரோடையாக அழகுடன் செல்ல வேண்டிய தமிழ்மனம், குழப்பிய குட்டையாக காட்சியளிக்கையில், அதனை மேலும் குழப்பி விடுவேனோ அல்லது குழப்ப என் பதிவை ஒரு வாய்ப்பாக்கி கொடுத்து விடுவேனோ என்பதுதான் என் பயம். அதனால்தான் உங்கள் "மனதுக்கு" கொடுக்கிறேன் என்ற வார்த்தையையும் உபயோகித்தேன்.
//உங்களுக்கே பயந்து. நாளைக்கோ மறுநாளோ இதில் உள்ள எதையாவது நாமே மறுத்துப் பேசவேண்டி வந்துவிடுமோ என்று பயந்து...//
இல்லை.. நீங்கள் சொல்ல வரும் கருத்து சரியே..ஆனால் இதற்காக துளியும் பயம் இல்லை. அதாவது நான் இன்று சொல்வதை நாளை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரலாம். ஆனால் அதனை நான் ஏற்கனவே எனக்கும், பதிவின் வாயிலாக மற்றவர்களிடமும் ஒப்புக்கொண்டு விட்டதால் பயம்/கவலை ஏதும் இல்லை..change is the only constant என்பதை நன்றாகவே அறிவேன்.
//எப்படியும் நல்ல பதிவு. //
பாராட்டுக்கு நன்றி பொன்ஸ்.
//- இத்தனை மதங்களை உருவாக்கியதும், அந்தந்த காலங்களில் வாழ்ந்த மனிதனும்,அவன் சந்தித்த சூழ்நிலைகளும், மற்ற மதங்களும் தான் :) //
ஆஹா.. அழகான வார்த்தைகள்.
(ஆனால், பொதுவாக அனைவரும் தன் மதம் மட்டும் இறைவனால் உறுவாக்கப்பட்டது, மற்ற மதங்கள் மனிதரால் உறுவாக்கப்பட்டது என்பதையே நம்புவார்களே).
நண்பா கொஞசம் சிக்கலான விஷயம். ஆனா அதைப் பற்றிய உன் கருத்துக்களை எளிமையாச் சொல்லி விட்டாய். பதிவினில் நீ குறிப்பிட்டு இருக்கும் பல விஷயங்களை என்னால் என் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்க முடிகிறது.
நண்பர் ராகவன் சொல்லியிருக்கும்
//மதத்தை விட இறைவன் பெரியவர். //
இது என் கருத்தும் கூட.
நேற்றைய காலஙகளில் மதஙக்ளும் அதன் தலைவர்களும் மனிதனைக் கடவுளை நோக்கி அழைத்துச் சென்றனர். ஆனால் இன்றைய மதங்களும் அதன் தலைமையினரும் செய்யும் சில பலக் காரியங்கள் மனிதனைக் கடவுளை விட்டுத் தள்ளி நிற்கச் செய்கின்றன.
மதம் காட்டிய கடவுளை நம்பும் அளவிற்கு மதத்தை நம்ப மனத்தில் ஒரு சின்ன நெருடல். சிலக் கேள்விகளுக்லு பதில்கள் கிடையாதோ என்ன்வோ..
உங்கள் சிகப்பெழுத்துப் பகுதியுடன் முழுமையாக உடன்படுகிறேன்.
பிறப்பிலிருந்து தொடர்ந்து ஊட்டப்பட்டு வரும் மத விஷயங்களுக்குள் நாம் ஊறிப் போய்,அதனை விட்டு வெளியே வரவோ, எதிர்க்கவோ, கேள்வி கேட்கவோ நாம் நம்மையறியாமலே தயக்கமோ,'பயமோ' கொள்கிறோம். ஒரு எல்லைக் கோட்டுக்குள் இருந்து பழகிய மனமும், வெளியே பார்க்காதே, போகாதே என்று சொல்லித்தரும் மதக் கோட்பாடுகளுமே இதற்குரிய காரணிகள்.
அந்த எல்லைக் கோட்டை கொஞ்சம் தாண்டிப் பார்த்தால் 'எல்லாம்' அதனதன் நிலைப்பாட்டோடு - perspectives - தெரிவதாக எனக்குத் தோன்றுகிறது. நீங்களும் ஜோவும் அந்த எல்லைக் கோட்டுக்குச் சற்றே உள்ளே நிற்பதாக என் அனுமானம். இருவருமே இன்னும் ஓரிரு அடிகள் எடுத்து வைக்க வாழ்த்துக்கள்!
//நண்பா கொஞசம் சிக்கலான விஷயம். ஆனா அதைப் பற்றிய உன் கருத்துக்களை எளிமையாச் சொல்லி விட்டாய்.//
வாழ்திற்கு மிக்க நன்றி தேவ்.
//பதிவினில் நீ குறிப்பிட்டு இருக்கும் பல விஷயங்களை என்னால் என் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்க முடிகிறது.//
:-)
//நேற்றைய காலஙகளில் மதஙக்ளும் அதன் தலைவர்களும் மனிதனைக் கடவுளை நோக்கி அழைத்துச் சென்றனர். ஆனால் இன்றைய மதங்களும் அதன் தலைமையினரும் செய்யும் சில பலக் காரியங்கள் மனிதனைக் கடவுளை விட்டுத் தள்ளி நிற்கச் செய்கின்றன.//
கசக்கும் மற்றுமொறு உண்மை தேவ் இது.
//மதம் காட்டிய கடவுளை நம்பும் அளவிற்கு மதத்தை நம்ப மனத்தில் ஒரு சின்ன நெருடல். சிலக் கேள்விகளுக்லு பதில்கள் கிடையாதோ என்ன்வோ.. //
ம்ம்ம்.. யோசித்து யோசித்து களைத்து போன பல பழைய கேள்விகளை உன் பின்னூட்டம் மறுபடியும் ஞாபகம் கொள்ளச் செய்கிறது நண்பா.. விளக்கமாக ஒரு நாள் பேச வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஹமீது!
சொல்ல வேண்டிய எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டு மதம் தேவையா என்ற கேள்வியே இங்கு தேவையில்லை.
மனிதனின் சில(பல) காலம் வரை கடவுளை உணர மதம் கண்டிப்பாக தேவை. மதத்தினால் ஒருவன் முழுமை அடைந்து விட்டால் அவனுக்கு மதம் தேவையில்லை.
நீங்கள் தவிர்க்க வேண்டிய விசயத்தை நானும் தொட விரும்பவில்லை.
என் பதிவில் ஒரு முறை கூறியதை போல என் விருப்பம் என்னுடன் இருக்க வேண்டும், உன் விருப்பம் உன்னுடன் இருக்க வேண்டும். இது சரியாக நடந்தால் எல்லாமே சரியாக நடக்கும். இது மதம், ஜாதி, கடவுள் போன்ற அனைத்திற்கு சேர்த்து தான்.
மதத்துனால மனிதனுக்கு மதம் பிடிக்காத வரைக்கும மதம் தேவை.... :-)
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க... :-)
தருமி ஐயா,
பதிவு குறித்த தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
நான் முக்கியமாக சொல்ல நினைத்ததை சிகப்பெழுத்தில் கூறினேன். அந்த கருத்துக்கள் தங்களுக்கும் ஏற்புடையது என்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது..
//அந்த எல்லைக் கோட்டை கொஞ்சம் தாண்டிப் பார்த்தால் 'எல்லாம்' அதனதன் நிலைப்பாட்டோடு - perspectives - தெரிவதாக எனக்குத் தோன்றுகிறது. நீங்களும் ஜோவும் அந்த எல்லைக் கோட்டுக்குச் சற்றே உள்ளே நிற்பதாக என் அனுமானம். இருவருமே இன்னும் ஓரிரு அடிகள் எடுத்து வைக்க வாழ்த்துக்கள்!//
இதில் எனக்கு உடன்படுவதா, இல்லையா என்பதில் சற்று குழப்பமாக இருக்கிறது..
அந்த ஓரிரு அடிகள் எடுத்து வைப்பது நன்மை பயக்குமா என்பதும் உறுதியாக தெரியவில்லை. கடவுளை நம்பும்போதும் மத பழக்கவழக்கங்களை பின்பற்றும்போதும் மனம் தீயவைகளை விட்டு விலகி இருந்தது(on comparitive level). தனி மனித ஒழுக்கம் சம்பந்தப்பட்டது இது.. தங்களுக்கு நான் சொல்ல நினைப்பது புரியும் என நம்பி விரிவாக கூறாமல் நிறுத்திக்கொள்கிறேன்.
எனிவே.. இங்கு நீங்கள் பேசீருப்பது தனி மனிதர்களை பற்றி.. ஆனால் பொதுவாக மனித குலம் பற்றி பேசுகையில் மதம் தேவை என்பதே என் கருத்தாக இன்று இருக்கிறது.
வாழ்த்திற்கு நன்றி சியாம். எப்படி இருக்கீங்க?
//மதத்துனால மனிதனுக்கு மதம் பிடிக்காத வரைக்கும மதம் தேவை.... :-)//
அழகான வாக்கியங்கள்.. ஒரு சிறு மாற்றத்துடன் என் கருத்தையும் இதே பானியில் சொல்கிறேன்.
மதத்துனால மனிதனுக்கு மதம் பிடிக்காத வரைக்கும மதம் இருப்பதில் தவறில்லை... okவா?
***************
சிவா,
//சொல்ல வேண்டிய எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டு மதம் தேவையா என்ற கேள்வியே இங்கு தேவையில்லை. //
நண்பா, அதுவே இன்று மிகப்பெரிய கேள்வியாக மக்களை அச்சுருத்துகையில் அந்த கேள்வியும் அதற்கான விடையும் தேவையே. அத்ற்கு என் பதிலையே இந்த பதிவாக இட்டுள்ளேன்.
//மனிதனின் சில(பல) காலம் வரை கடவுளை உணர மதம் கண்டிப்பாக தேவை. //
மதங்கள் கடவுளை( இருப்பதாக நம்புபவர்களுக்கு) நோக்கித்தான் அழைத்து செல்கிறதா? தேவின் பின்னூட்டம் பார்க்கவும்.
இதை பற்றிய என் கருத்து தெளிவாக பதிவில் உள்ளது.. உனக்காக மீண்டுமொருமுறை.
எப்படி சட்டங்கள் ஒரு குடிமகனை தவறுகள் செய்தால் தண்டனை உண்டு என பயமுறுத்தி அவன் தீய வழியில் செல்லாமல் இருக்க பயன்படுகிறதோ அது போல. ஆகவே மனித குலத்திற்கு பாதை தெரிந்து நடக்க மதங்கள் தேவை.
//மதத்தினால் ஒருவன் முழுமை அடைந்து விட்டால் அவனுக்கு மதம் தேவையில்லை. //
ம்ம்.. வார்த்தைகளை மாற்றி பொட்டு இருக்கிறாயோ என சந்தேகமாக இருக்கிறது.
மதத்தினால் முழுமை அடைவது ??? ஒருவேளை, விவாதத்தை வேறுபாதையில் எடுத்துச்செல்ல/ எடுத்துச்சொல்ல விரும்புகிறாயா?
மதத்தினால் முழுமை அடைவதை விட மனத்தினால் முழுமை அடைந்து விட்டால் மதம் தேவை இல்லை என சொன்னால் ஒப்புக்கொள்கிறேன்.
//நீங்கள் தவிர்க்க வேண்டிய விசயத்தை நானும் தொட விரும்பவில்லை. //
எதனை கூறுகிறீர்கள் என புரிவது போல் உள்ளது..
அது தவிர்க்க வேண்டியதுதானா? அனைவரும் தவிர்கின்றனரா?
//என் பதிவில் ஒரு முறை கூறியதை போல என் விருப்பம் என்னுடன் இருக்க வேண்டும், உன் விருப்பம் உன்னுடன் இருக்க வேண்டும். இது சரியாக நடந்தால் எல்லாமே சரியாக நடக்கும். இது மதம், ஜாதி, கடவுள் போன்ற அனைத்திற்கு சேர்த்து தான்.//
ம்ம்.முழுவதும் உடன்படமுடிய வில்லை.மறுபடியும் பதிவில் இருந்து.
அதே நேரத்தில் அந்த நம்பிக்கைகள் மற்ற மனிதரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். தவறாக இருப்பின் விவாதிக்ககூடிய, தவறு இருந்தால் மாற்றிகொள்ளக்கூடிய சூழ்நிலை நிலவ வேண்டும்.
மனதின் ஓசை,
இந்த பதிவுக்கு நன்றி .இப்போதைக்கு தருமி அவர்களுக்கு பதில் சொல்கிறேன்.மற்றவை பின்னர்.
தருமி,
//அந்த எல்லைக் கோட்டை கொஞ்சம் தாண்டிப் பார்த்தால் 'எல்லாம்' அதனதன் நிலைப்பாட்டோடு - perspectives - தெரிவதாக எனக்குத் தோன்றுகிறது. நீங்களும் ஜோவும் அந்த எல்லைக் கோட்டுக்குச் சற்றே உள்ளே நிற்பதாக என் அனுமானம். //
நீங்கள் மத நம்பிக்கைகள் குறித்து சொல்வதாக இருந்தால் அது என்னைப்பொறுத்தவரை உண்மை என்றே நம்புகிறேன் .ஏனென்றால் நான் கடவுள் நம்பிக்கையையும் ,மத நம்பிக்கையையும் தெளிவாக பிரித்து வைத்திருக்கிறேன் .நீங்கள் இரண்டிலிருந்தும் வெளியே வந்திருக்கிறீர்கள் .ஆனால் நான் மத நம்பிக்கைகளிலிருந்து ஓரளவு வெளியே வந்திருக்கிறேனே தவிர ,கடவுள் நம்பிக்கை அசையாமல் இருக்கிறது .பிற்காலத்தில் நான் முற்றிலும் மத நம்பிக்கையிலிருந்து வெளியே வந்தாலும் ,கடவுள் நம்பிக்கையை அது பாதிக்காமல் இருக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக நான் கருதுகிறேன்.
மதத்தை கடந்து வாழ்வதாகத்தான் நான் நினைக்கிறேன்.மோசமான இந்த வெறியனாக இருந்த காலமும்( ஆனால் பக்தி இல்லாமல்- அது எப்படின்னு கேட்கறீங்களா:))உண்டு.
இனத்தை,மொழியை கடந்தவங்களுக்கு மதம் இருப்பதை பார்த்து சிரித்துக்கொள்வேன் அப்பப்ப.
//மதத்துனால மனிதனுக்கு மதம் பிடிக்காத வரைக்கும மதம் இருப்பதில் தவறில்லை//
இப்படி சொல்ல வந்ததுதான் அப்படி ஆகிபோச்சு...ரொம்ப சரியா சொன்னீங்க :-)
வருகைக்கு மிக்க நன்றி முத்து.
//மதத்தை கடந்து வாழ்வதாகத்தான் நான் நினைக்கிறேன்.//
மகிழ்ச்சியான விஷயம் முத்து.
//மோசமான இந்த வெறியனாக இருந்த காலமும்( ஆனால் பக்தி இல்லாமல்- அது எப்படின்னு கேட்கறீங்களா:))//
கண்டிப்பா... சொன்னால் கேட்டுக்கொள்ள ஆவலா இருக்கிறேன்..
//இனத்தை,மொழியை கடந்தவங்களுக்கு மதம் இருப்பதை பார்த்து சிரித்துக்கொள்வேன் அப்பப்ப. //
ம்ம்ம்.. யார் யார தாக்கறீங்கன்னு முழுசா புரியல.. ஆனா நீங்க சொல்றது சரிதான்.. :-)
***********
இப்படி சொல்ல வந்ததுதான் அப்படி ஆகிபோச்சு...ரொம்ப சரியா சொன்னீங்க :-)
:-)
சியாம்.. அடிக்கடி எனக்கும் இப்படி ஆவது வழக்கம்தான்.
னல்ல கருத்துகள்.என் கோட்பாடும் அதுவே.
(எனக்கு மிகபிடித்த நாவலின் பெயரை வைத்துக்கொண்ட) பொன்னியின் செல்வனே,
முதல் வருகை என நினைக்கிறேன்.
வருகைக்கும் பதிவுக் கருத்துடன் உடன் படுவதற்கும் மிக்க நன்றி.
ஆமா.. எப்படி இந்த (பழைய)பக்கத்துக்கு இப்ப திடீர்னு வந்தீங்க?
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். எனக்கும் இதே போல் எத்தனையோ கேள்விகள் வந்ததுண்டு. அவற்றை http://kaddurai.blogspot.com/2005/05/blog-post_20.html இங்கே கடந்த வருடத்தில் பதிவு செய்திருந்தேன்.
வெவ்வேறு மதங்களும் வெவ்வேறு காலகட்டத்தில் மனிதரால் உருவாக்கப்பட்டது என்றே நான் நம்புகிறேன். இதில் எனது கடவுள் முதன்மையானவர், உண்மையானவர் என்பதெல்லாம் மனித சமூகத்துக்கு அவசியமே இல்லாத, எந்த விதத்திலும் உதவாத வாக்குவாதங்கள் என்பது எனது அபிப்பிராயம். மதங்கள் மனிதரை ஆட்டிவிக்க முற்படுகையில் அது மனித சமூகத்துக்கு தீங்காகவே முடிகிறது. இல்லையா?
கலை,
முதல்முறை வருகை தந்து உள்ளீர்கள் என நினைக்கிறேன்..
கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் தங்கள் பதிவின் சுட்டியை கொடுத்ததற்கும் மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கு சரியான விரிவான பதிலை உடனடியாக தர இயலாத நிலையில் உள்ளேன்.. விரைவில்(ஊருக்கு சென்று வந்த பின்) என் பதிலையும், உங்கள் பக்கத்தை பார்த்து அங்கு என் கருத்துக்களையும் சொல்கிறேன்.
இந்த பதிவிற்கு மறுபடியும் உயிரூட்டி இன்னும் சிலரின் பார்வைக்கு இந்த பதிவை அளித்த பொன்னியின் செல்விக்கு என் நன்றிகள்.
அடுத்தவரை மனிதனாக மதிக்க ;நான் பின்பற்றும் மதம் எனக்குத் தடையாக இருந்தால் அந்த மதம் வேண்டாம்.
பல விடையில்லாக் கேள்விகள் ;இதிலுண்டு. எனினும் ஏழைகளுக் குதவுதல் எனும் ;மகேசன் சேவையை நாம் ஒவ்வொருவரும் இயன்றவரை செய்வோம்.
அவன் தலைவிதி அவன் அவதிப்படுகிறான் என்பதைத் தவிர்ப்போம்.
இது தான் இறைவன்
யோகன் பாரிஸ்
//எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிற அளவுக்கு மத நம்பிக்கை கிடையாது//
"எனக்கு மத நம்பிக்கை இருக்கிற அளவுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது."
இப்படி சொல்பவர்கள் கூட சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதில் கூட ஏதாவது உண்மை இருக்கலாம்.
மதங்கள் இல்லாத அல்லது வலுவான அமைப்புள்ள மதங்கள் இல்லாத சமுதாயங்கள் முன்னேறி இருக்கிறதா?
உலகம் முழுதும் பழங்குடிகள் பழங்குடிகளாக இருப்பதற்கு மதமில்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா?
ஒவ்வொரு சமைலறையிலும் இருக்கும் கத்திகள் அனைத்தும் கொலை செய்யக் கூடியவைதான்.
வெளிப்படையாக பல கத்திகள் கொலைகளை செய்து கொண்டிருக்கின்றன.
மௌனமாக பல கத்திகள் ஒவ்வொரு வீட்டிலும் சமையல் செய்து கொண்டிருக்கின்றன.
நான் கத்திகளைப் பார்த்து பயப் படுவதில்லை. கொலைகளைப் பார்த்து மட்டுமே.
Hi JohanParis and ஓகை,
Thanks for your comments.
I am starting to my native right now. Will reply to your comments by tuesday. Thanks.. Bye.
அருமையான பதிவு.
உங்களுக்காக ஒரு கவிதை
செக்கச்சிவந்த மலரொன்று
நான் யார் என்று காற்றிடம் கேட்டது
நீ கணநேர காவியம்
அந்த மலரின் மகரந்தத்தை
உன் மீது தெளித்த பின்னால்
நீ கருகி
காயாக வேண்டியது உன் வேலை
நான் இங்கேயே இருப்பேன்.
உன்னையும் உன்னைப்போல
ஓராயிரம் மலர்களையும் கருக்கிக்கொண்டு
என்றது காற்று.
மேலே சுழன்றடித்த சூரியன்
இன்னும் எத்தனையோ பூமிகளையும் கிரகங்களையும்
உமிழ்ந்து உருக்கி உண்டு
மீண்டும் உமிழ்ந்து நடத்தும் ஊழிக்கூத்தில்
அவரவருக்கு என்ன எண்ணங்கள்?
எத்தனை உயிரினங்களை பார்த்துவிட்டேன்
எத்தனை மதங்களை பார்த்துவிட்டேன்
எத்தனை கணநேர காவியங்கள்!
எல்லாமே சாம்பல் என்றது
--
அன்புடன்
எழில்
//
எப்படி சட்டங்கள் ஒரு குடிமகனை தவறுகள் செய்தால் தண்டனை உண்டு என பயமுறுத்தி அவன் தீய வழியில் செல்லாமல் இருக்க பயன்படுகிறதோ அது போல. ஆகவே மனித குலத்திற்கு பாதை தெரிந்து நடக்க மதங்கள் தேவை.
//
ஒரு வகையில் இது உண்மை தான். சட்டங்களைப் போன்றவையே மதங்களும் என்பது தான் என் கருத்தும். நாட்டிற்கு நாடு சட்டம் மாறுபடுவது போல் மதங்களும் மாறுபட்டு இருக்கின்றன. மனிதனால் இயற்றப்படும் சட்டங்களைப் போலவே மனிதனால் உருவாக்கப் பட்ட மதங்களும் குறையுள்ளவையே. இயற்கையை விளக்கவும் குமுகாயத்திற்கு தீங்கின்றி மக்களை வழி நடத்திச் செல்லவும் மதங்கள் தேவைப்பட்டன.
//
மதத்தினால் முழுமை அடைவதை விட மனத்தினால் முழுமை அடைந்து விட்டால் மதம் தேவை இல்லை என சொன்னால் ஒப்புக்கொள்கிறேன்.
அதே நேரத்தில் அந்த நம்பிக்கைகள் மற்ற மனிதரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். தவறாக இருப்பின் விவாதிக்ககூடிய, தவறு இருந்தால் மாற்றிகொள்ளக்கூடிய சூழ்நிலை நிலவ வேண்டும்.
//
நமது பரிணாம வளர்ச்சி இன்னும் முழுமை அடையவில்லை நண்பரே. ஒரு மனிதன் இயற்கையை என்று முழுமையாக அறிந்து கொண்டு தன்னலத்தைப் போன்று பிறர்நலத்தையும் நினைக்கிறானோ அன்று தான் ஒருவனின் பரிணாம வளர்ச்சியும் முழுமை பெறும். இது போல் எல்லோரும் முழுமை அடைய வேண்டும். அது வரை மதங்களும் சட்டங்களும் தேவை தான். ஆனால் இது நடக்க பல்லாயிரம் ஆண்டுகள் ஆகலாம்.
அது வரை எப்படிச் சட்டங்களைக் காலத்திற்கு தகுந்த முறையில் மாற்றுகிறோமோ அப்படி மதங்களிலும் மாற்றங்களைக் கொணர வேண்டும். இராமரையும் இயேசுவையும் அல்லாஹையும் சற்று ஒதுக்கி வைத்து முன்னேற்றத்தை பார்க்க வேண்டும் என்பது என் கருத்து.
ஒவ்வொருவரும் தனக்கு நன்மை தேடிக்கொள்ள வேண்டும். அது பிறரை பாதிக்காத வழியில் இருக்க வேண்டும். அதுவே அவரது மதமாக அமையும். ஒவ்வொருவருக்கும் ஒரு மதம் தேவை.
மனதின் ஓசை,
உங்க போஸ்ட் இது வரை பிரச்சனையில்லாமல் போறது எனக்கு பிடிக்கல :-).....
ஒரு பிரச்சனைய கிளப்பலாம்னு நினைக்கிறேன்... என்ன சொல்றீங்க?....
//அடுத்தவர் மதத்தினை, நம்பிக்கைகளை மதிக்க கூடிய மனநிலை காலத்தின் கட்டயமாகிறது.. அதே நேரத்தில் அந்த நம்பிக்கைகள் மற்ற மனிதரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். தவறாக இருப்பின் விவாதிக்ககூடிய, தவறு இருந்தால் மாற்றிகொள்ளக்கூடிய சூழ்நிலை நிலவ வேண்டும். //
அடுத்தவர் மதத்தினை மதிப்பது, மதிக்காமல் இருப்பது, தனது மதத்தின் மீது இருக்கும் வெறி - இவை தனிமனிதனிடம் ஏற்படுகிறதா அல்லது ஒட்டு மொத்த சமூக நோயின் வெளிப்பாடாக வருகிறதா?
அதாவது எனது கேள்வி, மதங்களின் பெயரில் அடித்துக் கொள்ளும் எல்லாச் சண்டைகளுக்கும் பின்னே இருப்பது, அடித்தளமாக இருப்பது மதம்தானா?
இதன் விடை மதம் இல்லையெனில், மத நல்லிணக்கம் நீங்கள் சொல்லுவது போல பிற மதங்களை சகித்துக் கொள்வதால், மதிப்பளிப்பதால் மட்டும் உருவாகாது. மாறாக மத வெறிக்கான அந்த சமூக ஊற்று மூலத்தை அடைப்பதால் மட்டுமே சரியாகும்.
அப்படியெனில் அந்த சமூக ஊற்று மூலம் எது?
பதில் சொல்லாமயே போறது, இல்லையின்னா, 'அசுரன் நீங்க சொல்றது சரிதான்னு' எஸ்கேப் ஆறதுன்னு இல்லாம யாராவது விவாதத்துக்கு வாங்கப்பா.....
அசுரன்
கீழே உள்ள இரண்டு சுட்டிகளும் இந்த விவாதத்துடன் தொடர்புடையது என்று நினைக்கிறேன்.
http://kathalregai.blogspot.com/2006/11/blog-post_05.html
http://kathalregai.blogspot.com/2006/11/blog-post.html
கலை, உங்கள் பதிவை பார்த்தேன். நல்ல பதிவு. கடவுளின் பெயரால் நடக்கும் கேலிக்கூத்துக்களை உங்கள் கேள்விகளால் துகிலுரித்துக் காட்டி இருக்கிறீர்கள். ஆனால், அது அதிக பதிவரை சென்றடையவில்லை என நினைக்கிறேன்.
//வெவ்வேறு மதங்களும் வெவ்வேறு காலகட்டத்தில் மனிதரால் உருவாக்கப்பட்டது என்றே நான் நம்புகிறேன்.//
இது உண்மையாகவும் இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.
//எனது கடவுள் முதன்மையானவர், உண்மையானவர் என்பதெல்லாம் மனித சமூகத்துக்கு அவசியமே இல்லாத, எந்த விதத்திலும் உதவாத வாக்குவாதங்கள் என்பது எனது அபிப்பிராயம்.//
மிகச்சரி.
//மதங்கள் மனிதரை ஆட்டிவிக்க முற்படுகையில் அது மனித சமூகத்துக்கு தீங்காகவே முடிகிறது. இல்லையா? //
இல்லை. தனி மனிதனுக்கு மதம் தேவை இல்லாமல் இருக்கலாம்.. ஆனால், சமூகத்திற்கு மதங்கள் தேவை எனவே நான் நினைக்கிறேன்.
பதிவிலிருந்து..
/மனித குலத்திற்கு பாதை தெரிந்து நடக்க மதங்கள் தேவை. இந்த நிலையிலேயே மதங்களுக்கான மதிப்பு இருக்க வேண்டும். /
(மதங்களால் ஏற்படும் சண்டைகள் தேவை என கூறவில்லை.) மதங்களை பின்பற்றுபவர்களுக்கு ஒரு தெளிவு இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
பதிவிலிருந்து..
/அடுத்தவர் மதத்தினை, நம்பிக்கைகளை மதிக்க கூடிய மனநிலை காலத்தின் கட்டயமாகிறது.. அதே நேரத்தில் அந்த நம்பிக்கைகள் மற்ற மனிதரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். தவறாக இருப்பின் விவாதிக்ககூடிய, தவறு இருந்தால் மாற்றிகொள்ளக்கூடிய சூழ்நிலை நிலவ வேண்டும். /
ஓகை,
நானும் கொலைகளை கண்டே பயப்படுகிறேன். அவை நிச்சயமாக அர்த்தமற்றவை எனவும் நம்புகிறேன்.
இவை பல இடங்களில் சமையல் செய்து கொண்டு இருப்பவைகளை கொலைக்கூடத்திற்கு கூட்டிவந்து விடுமோ எனவும் அஞ்சுகிறேன்.
என்னிடம் இருப்பது மட்டும்தான் சரியான கத்தி.. இதையே சமையலுக்கு பயன்படுத்தவேண்டும் எனக்கூறியே அவை கொலை செய்து கொண்டு இருப்பதுதான் வேடிக்கையான கொடுமை.
//"எனக்கு மத நம்பிக்கை இருக்கிற அளவுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது."
இப்படி சொல்பவர்கள் கூட சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதில் கூட ஏதாவது உண்மை இருக்கலாம். //
மதம் என்பது கடவுளிடம் அழைத்துக்கொண்டு செல்லும் பாதை எனவே அனைத்து மதங்களும் சொல்லுவதாக நான் நினைக்கிறேன். கடவுள் நம்பிக்கை இல்லாமல் மத நம்பிக்கை இருக்கும் என நான் நினைக்கவில்லை.
//உலகம் முழுதும் பழங்குடிகள் பழங்குடிகளாக இருப்பதற்கு மதமில்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா?//
அப்படியா? பழங்குடிகளிடன் மதங்கள் இல்லையா? எனக்கு தெரியவில்லை.
யோகன் பாரிஸ்,
நியாயமான வாதம். அடுத்தவருக்கு உதவுவது என்பதை விட இறைவனுக்கு செய்யும் மிகச்சிறந்த சேவை என ஒன்று இருக்க முடியாது..
எது உண்மையான கடவுள் என சண்டையிடுவதை விட்டு ஏழைகளுக்கு உதவுவதால் எந்த கடவுள் உண்மையானவராக இருந்தாலும்
அவர் இதனை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்.
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி எழில்.அருமையான பெயர் :-)
அடப்போங்கடா நீங்களும் உங்க மதங்களும் என நீங்கள் சொல்வது புரிகிறது.
//எத்தனை உயிரினங்களை பார்த்துவிட்டேன்
எத்தனை மதங்களை பார்த்துவிட்டேன்
எத்தனை கணநேர காவியங்கள்!
எல்லாமே சாம்பல் என்றது//
:-)
எல்லாமே சாம்பல்தானா?
floralpuyal,
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.
ம்ம்.. நமது பரினாம வளர்ச்சி இன்னும் முழுமையடையாமல் இருக்கலாம்.. ஒருவேளை, முழுமையடையாமலேயே போகலாம். ஆனால், மதங்களின் பெயரால் நடக்கும் கொடுமைகள் களையப்பட வேண்டும். அனைவருக்கும் மதங்களை விட அல்லது மதங்களுடன் கூடவே மனிதர்களும் முக்கியம் என்ற எண்ணம் வரவேண்டும்.
//ஒவ்வொருவரும் தனக்கு நன்மை தேடிக்கொள்ள வேண்டும். அது பிறரை பாதிக்காத வழியில் இருக்க வேண்டும். //
மிகச்சரி.. இது அனைவருக்கும் புரிந்தாலே இவ்வுலகிலேயே சொர்க்கத்தை கானலாம்.
//அதுவே அவரது மதமாக அமையும். ஒவ்வொருவருக்கும் ஒரு மதம் தேவை. //
:-)
அசுரா,
வாங்க வாங்க..
//உங்க போஸ்ட் இது வரை பிரச்சனையில்லாமல் போறது எனக்கு பிடிக்கல :-).....//
:-)
//ஒரு பிரச்சனைய கிளப்பலாம்னு நினைக்கிறேன்... என்ன சொல்றீங்க?....//
நல்ல விவாதங்கள் என்றுமே உண்மைகளை வெளிக்கொனரும், மனங்களை தெளிவடைய வைக்கும் என்பதில் எனக்கு உடன்பாடு உள்ளதால் தாராளமாக.
//அதாவது எனது கேள்வி, மதங்களின் பெயரில் அடித்துக் கொள்ளும் எல்லாச் சண்டைகளுக்கும் பின்னே இருப்பது, அடித்தளமாக இருப்பது மதம்தானா?
இதன் விடை மதம் இல்லையெனில், மத நல்லிணக்கம் நீங்கள் சொல்லுவது போல பிற மதங்களை சகித்துக் கொள்வதால், மதிப்பளிப்பதால் மட்டும் உருவாகாது. மாறாக மத வெறிக்கான அந்த சமூக ஊற்று மூலத்தை அடைப்பதால் மட்டுமே சரியாகும். //
அசுரன் நீங்க சொல்றதும் சரிதான்..
(இருங்க..இருங்க.. சரிங்கரத சரின்னுதனே சொல்ல முடியும். :-) உங்க முக்கிய கேள்வி இனிமேதானே வருது?)
இந்த பிரச்சினைகளுக்கு ஊற்று மூலத்தை அடைப்பது சரியான விடையே. ஆனால் அந்த ஊற்று மூலத்தை கண்டு கொள்வதும் அடைப்பதும் எப்படி? தனி மனிதரிடத்தில் பிற மதங்களை சகித்துக் கொள்வது, மதிப்பளிப்பது போன்ற குணங்கள் வளர்ந்தால் அதுவும் அந்த ஊற்று அடைக்க ஒரு வழியாய் இருக்குமே.. காலப்போக்கில் அந்த ஊற்று வற்றிப்போய் விடுமே.
அதாவது.
//அப்படியெனில் அந்த சமூக ஊற்று மூலம் எது?// என்பதற்கு எனக்கு தெரிந்தவரை இது மதவெறியர்களால் மற்ற மதங்களை சகிக்க முடியாமல், அல்லது அரசியல் அல்லது தனி மனித ஆதாயம் தேடி மற்றவருக்கு மதவெறி ஊட்டப்பட்டு அதன் மூலம் தன் காரியத்தை சாதித்துக்கொள்ள செய்யப்பட்ட ஏற்பாடே இந்த ஊற்று. அப்படிப்பட்ட மனிதர்களை அடையாளம் கொண்டு அவர்களை களைவது மட்டும் தீர்வை தராது. அதற்குமுன் அவர்களை பின்பற்றுபவர்களுக்கு இது எவ்வளவு கேவலமானது என்பதை தெரியப்படுத்த வேண்டியது முதன்மையானது.
தனி மனிதரிடத்தில் பிற மதங்களை சகித்துக் கொள்வது, மதிப்பளிப்பது போன்ற குணங்கள் வளர்ந்தால் அதுவும் அந்த ஊற்று அடைக்க ஒரு வழியாய் இருக்குமே.. காலப்போக்கில் அந்த ஊற்று வற்றிப்போய் விடுமே.
சரிதானா? உங்கள் கருத்து என்ன எனப்தை தெரிந்து கொள்ளலாமா?
செந்தில் குமரன்,
உங்க பதிவுகளை படித்தேன்..
பதிவு தொடர்பான என் கருத்தை அங்கேயே சொல்லி இருக்கிறேன்.
இங்கே மறுபடியும் .
****
செந்தில்.
அருமையான யோசிக்க வைக்கும் பதிவு. அதே நேரம் முழுதும் என்னால் உடன்பட முடியவில்லை.
மதங்களால் தவறுகள் நிகழ்த்துள்ளது உண்மை. மிகமிக வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது இது.
அதற்கு மதங்களை விட அதனை வேறியாக மற்ற மக்களிடம் தூண்டி விடும் கூட்டமே முதற்காரனம்.
மதங்களால் நன்மைகளும் பல பரவலாக அமைதியாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
மதநல்லினக்கமே இதற்கு இப்பொதைய தீர்வு.
கடவுள் தத்துவமே ஒரு சந்தேகத்துகிடையேயான ஒரு விசயம்.இதனால் மதம் தேவையில்லாததாக ஆகிவிடுகிறது.
இப்பிரபஞ்சமும்,உயிரினங்கலும்,வேதியியல் மற்றும் பொளதீக மாற்றங்களும் அதன் இயல்புபடி சில விதிகளின் அடிப்படையில் தொடர்ந்து இயங்கிவருகிறது.இந்த விதிகளின் பின்னால் உள்ள இயக்கவிசையை அல்லது அந்த சூட்ச்சமத்தை அறிந்த மனிதமூலை தற்போது இருப்பதாக தெரியவில்லை.இதற்கு முன்னாலும் இருந்ததாக நிருபிக்கப்படவில்லை.
எல்லாம் ஒரு நம்பிக்கை அடிப்படையில் தான் சொல்லப்பட்டிருகிறது.ஆனால் நமக்கு பின்னால் வரும் மனிதவர்கமோ அல்லது நம்மை தாண்டி செல்லும் ஒரு உயிரினமோ அப்போது பயன்படுத்தும் கருவிகளை கொண்டு இந்த இயற்கை விதிகளை கண்டுபிடிக்கலாம்.
அதுவரை நடப்பதென்ன? நிரூபிக்கப்படாத மதத்தையும் கடவுளையும் சொல்லிக்கொண்டுதான் ராமர் கோயில்,பின்லேடன்,குஜராத் கலவரங்கள்,ஜிகாத்,சிலுவைபோர் போன்ற கூத்துக்கள் நடக்கின்றன.
பொதுவாக பெரும்பாலன மதங்கள் மறுமையின் இன்பம் அல்லது துன்பத்தை சொல்லியே இந்த மக்களை பயமுறுத்துகின்றன.ஆகவே இந்த ஆச்சரியமான இயற்கையை ஆராயத்தொடங்கினாலே இந்த பயம் போய்விடும்.
//
அசுரன் சொன்னது:
அதாவது எனது கேள்வி, மதங்களின் பெயரில் அடித்துக் கொள்ளும் எல்லாச் சண்டைகளுக்கும் பின்னே இருப்பது, அடித்தளமாக இருப்பது மதம்தானா?
இதன் விடை மதம் இல்லையெனில், மத நல்லிணக்கம் நீங்கள் சொல்லுவது போல பிற மதங்களை சகித்துக் கொள்வதால், மதிப்பளிப்பதால் மட்டும் உருவாகாது. மாறாக மத வெறிக்கான அந்த சமூக ஊற்று மூலத்தை அடைப்பதால் மட்டுமே சரியாகும். //
ஓசை சொல்வது:
அசுரன் நீங்க சொல்றதும் சரிதான்..
(இருங்க..இருங்க.. சரிங்கரத சரின்னுதனே சொல்ல முடியும். :-) உங்க முக்கிய கேள்வி இனிமேதானே வருது?)
இந்த பிரச்சினைகளுக்கு ஊற்று மூலத்தை அடைப்பது சரியான விடையே. ஆனால் அந்த ஊற்று மூலத்தை கண்டு கொள்வதும் அடைப்பதும் எப்படி? தனி மனிதரிடத்தில் பிற மதங்களை சகித்துக் கொள்வது, மதிப்பளிப்பது போன்ற குணங்கள் வளர்ந்தால் அதுவும் அந்த ஊற்று அடைக்க ஒரு வழியாய் இருக்குமே.. காலப்போக்கில் அந்த ஊற்று வற்றிப்போய் விடுமே.
அசுரன் சொல்வது:
மனதின் ஒசை, நான் சுட்டிக் காட்டியது மத வெறிக்கு மக்கள் பலியாவதன், மயங்குவதன் ஊற்று மூலம் எதுவோ அதை சரி செய்தால் மத வெறி பிரச்சாரம் வெற்றி பெறாது என்பதை. அதை விடுத்து தனிமனிதரிடம் மாற்றம் கோருவது மேக்கப் போடுவது போல ரொம்ப நாள் நிற்க்காது.
இது போன்ற தீர்வை நம்புவதன் அடிப்படை எதுவென்றால் - மத வெறி என்பது வெறுமனே மதம் குறித்த பிரக்சையால் மட்டுமே ஏற்ப்படுகிறது என்று நம்புவது.
ஆளும் வர்க்க ஊடகங்கள் உருவாக்கும் கருத்து இது. ஏனெனில் உண்மையிலேயெ மத அடிப்படைவாதத்திற்க்கு பின்புலமாக இருக்கும் பிரச்சனைகளை பேச ஆரம்பித்தால் அது அவர்களுக்கே ஆப்பு ஆகிவிடும் என்பதால் கவனமாக தவிர்த்து வெறும் மதம், மதக் கோட்ப்பாடுகள் மட்டுமே பிரச்சனை என்பது போல திரித்து விடுகிறார்கள்.
இந்த இடத்தில் sila கேள்விgaluக்கு விடை வேண்டியுள்ளது. காஸ்மீரில் என்ன அதிசயம் உள்ளது என்று அங்கு சில நூறு வருடங்களாக(1940 களுக்கு முன்பு) மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்தது? ஏன் அங்கு மத வெறி எழவில்லை.
இந்தியாவில் 1900 ஆரம்பங்களில் மத வெறி அரசியல் முக்கியத்துவம் பெறத் துவங்கியதன் மர்மம் என்ன?
இதன் பின்னே உள்ள அரசியல் எது?
இதற்க்கு விடை தேட முற்ப்பட்டால் அதன் முடிவு தனிமனித தீர்வில் வந்து நிற்ப்பதில்லை....
*******************
ஒசை சொன்னது:
அதாவது.
//அப்படியெனில் அந்த சமூக ஊற்று மூலம் எது?// என்பதற்கு எனக்கு தெரிந்தவரை இது மதவெறியர்களால் மற்ற மதங்களை சகிக்க முடியாமல், அல்லது அரசியல் அல்லது தனி மனித ஆதாயம் தேடி மற்றவருக்கு மதவெறி ஊட்டப்பட்டு அதன் மூலம் தன் காரியத்தை சாதித்துக்கொள்ள செய்யப்பட்ட ஏற்பாடே இந்த ஊற்று. அப்படிப்பட்ட மனிதர்களை அடையாளம் கொண்டு அவர்களை களைவது மட்டும் தீர்வை தராது. அதற்குமுன் அவர்களை பின்பற்றுபவர்களுக்கு இது எவ்வளவு கேவலமானது என்பதை தெரியப்படுத்த வேண்டியது முதன்மையானது.
தனி மனிதரிடத்தில் பிற மதங்களை சகித்துக் கொள்வது, மதிப்பளிப்பது போன்ற குணங்கள் வளர்ந்தால் அதுவும் அந்த ஊற்று அடைக்க ஒரு வழியாய் இருக்குமே.. காலப்போக்கில் அந்த ஊற்று வற்றிப்போய் விடுமே.
சரிதானா? உங்கள் கருத்து என்ன எனப்தை தெரிந்து கொள்ளலாமா?
அசுரன் சொல்வது:
//அரசியல் அல்லது தனி மனித ஆதாயம் தேடி மற்றவருக்கு மதவெறி ஊட்டப்பட்டு அதன் மூலம் தன் காரியத்தை சாதித்துக்கொள்ள செய்யப்பட்ட ஏற்பாடே இந்த ஊற்று.//
இதுதான் காரணம் எனில் இதை களைவதுதான் தீர்வு. அதாவது அந்த அரசியல், தனிமனித காரணங்களை களைவது. மாறாக உயர் பண்புகள் குறித்த பிரச்சாரம் என்பது அதற்க்கு சாதகமான சமூக சூழல் இல்லாத பட்சத்தில் வெற்றி அடையாது. நான் சொல்லுவது என்னவெனில், இந்த சமூக நோய்க்கான மருந்து சமூக தீர்வில் உள்ளது. தனிமனித தீர்வில் இல்லை என்பதை.
இன்னும் தெளிவாக எனது புரிதலை சொல்வது என்றால்:
//தனி மனிதரிடத்தில் பிற மதங்களை சகித்துக் கொள்வது, மதிப்பளிப்பது போன்ற குணங்கள் வளர்ந்தால் // - இந்த குணங்கள் வளர்வதற்க்கான சமூக சூழலை உறுதிப்படுத்தாமல் வெறுமே இந்த குண மாற்றங்களை பேசுவது பயன் தராது. இந்த சமூக சூழலை உருவாக்கினாலோ இந்த உயர் பண்புகள் அதன் போக்கில் பரிணமிக்கும். பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்காது.
அசுரன்
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி செல்வமனி.
உண்மை.. கடவுள் தத்துவமே இன்னும் நிரூபிக்கப்படாததுதான். கடவுள் இல்லை என்பதோ இருக்கிறார் என்பதோ இன்னமும் நிரூபிக்கப்படாததுதான்... அது வரும்காலங்களிலும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன்.
//அதுவரை நடப்பதென்ன? நிரூபிக்கப்படாத மதத்தையும் கடவுளையும் சொல்லிக்கொண்டுதான் ராமர் கோயில்,பின்லேடன்,குஜராத் கலவரங்கள்,ஜிகாத்,சிலுவைபோர் போன்ற கூத்துக்கள் நடக்கின்றன.//
இதனை களையவேண்டிய கட்டயத்திற்கு நாம் தள்ளப்பட்டு உள்ளோம்.. சீக்கிரம் இது உலகை அழித்து விடக்கூடிய ஆற்றலை பெற்றுவிடும் போல பயமுறுத்துகிறது.
//ஆகவே இந்த ஆச்சரியமான இயற்கையை ஆராயத்தொடங்கினாலே இந்த பயம் போய்விடும். //
சரியாக புரியவில்லை.எவ்வாறு?
அசராமல் கருத்தை சொல்லும் அசுரா,
நாம் மதவெறிக்கு காரனம் மதங்களை விட அதனை வைத்து ஆதாயம் தேட நினைக்கும் மனிதர்களே என்பதில் உடன்படுகிறோம் என நினைக்கிறேன். சரிதானே?
இப்போது அதனை சரிசெய்ய சரியான வழிமுறை என்ன என்பதில்தான் விவாதம். கொஞ்சம் சுருக்கமாக இப்பொது சொல்கிறேன்.
இவர்களை அடையாளம் கொண்டு களைவது இதற்கு தீர்வு என நீங்கள் சொல்வதாக நினைக்கிறேன்.. அது எப்படி சாத்தியம்? களைவது என்றால் அவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வருவதா? அல்லது அவர்களை நாடு கடத்துவதா? இல்லை வேறு ஏதும் வழிகள் உள்ளதா? இதை செய்ய முடியுமா? எப்படி? அப்படியே இருந்தாலும் ( நம்மைப்போல் உள்ள) தனி மனிதன் எந்த விதத்தில் செய்ய இயலும்?அவ்வாறு செய்தாலும் அவர்களை பின்பற்றும் கூட்டம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமே? இதற்கு என்ன தீர்வு?
//காஸ்மீரில் என்ன அதிசயம் உள்ளது என்று அங்கு சில நூறு வருடங்களாக(1940 களுக்கு முன்பு) மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்தது? ஏன் அங்கு மத வெறி எழவில்லை.
இந்தியாவில் 1900 ஆரம்பங்களில் மத வெறி அரசியல் முக்கியத்துவம் பெறத் துவங்கியதன் மர்மம் என்ன?
இதன் பின்னே உள்ள அரசியல் எது? //
இதனை பற்றி விளக்கமாக சொல்ல முடியுமா.. எனக்கு முழுமையாக தெரியாது.
//இந்த குணங்கள் வளர்வதற்க்கான சமூக சூழலை உறுதிப்படுத்தாமல் வெறுமே இந்த குண மாற்றங்களை பேசுவது பயன் தராது.//
முழுதும் உடன்படவில்லை என்றாலும் உங்கள் வார்த்தையில் நியாயம் உள்ளது.
//இந்த சமூக சூழலை உருவாக்கினாலோ இந்த உயர் பண்புகள் அதன் போக்கில் பரிணமிக்கும்//
எவ்வாறு? எது தீர்வு ? எப்படி அது நடைமுறைக்கு ஒத்துவரும்..
தேவை. :)
தற்பொழுது வேறு சில வேலைகள் உள்ளதால் சிறிது தாமதமாக நாளை அல்லது மறுநாள் பதில் சொல்கிறேன்.
உங்களது கேள்விகள் அருமையானவை. நல்ல விவாதத்திற்க்கு வித்திட்டுள்ளீர்கள்.
அப்புறம் முக்கியமாக....
சுரண்டலில்லாமல் ஒரு சமூகம் சிற்ப்பானதொரு வாழ்க்கை வாழ முடியும் என்று நிரூபித்த....
கற்பனாவாதம் என்று கை கோட்டி சிரித்த ஏகாதிபத்திய சுரண்டல்க்காரர்களின் முகத்தில் கரி பூசி வறியவர்களுக்கு நம்பிக்கை கொடுத்த...
உலகையே புரட்டிப் போட்ட.....
பாட்டாளி வர்க்கத்தின், விவசாயிகளின் - உழைக்கும் மக்களின் முதல் ஆட்சியை நிதர்சனமாக்கிய...
அக்டோ பர் ரஸ்ய புரட்சி நாள் இன்று....
அந்த இனிய ஏழில் அந்த அனுபவங்களை நெஞ்சில் ஏந்தி சம்தர்ம சமுதாயத்தை நிர்மாணிக்க போராட உறுதியேற்க்க வேண்டுகிறேன்.
நவம்பர் புரட்சி வாழ்த்துக்கள்!!
அசுரன்
//கடவுள் இல்லை என்பதோ இருக்கிறார் என்பதோ இன்னமும் நிரூபிக்கப்படாததுதான்... அது வரும்காலங்களிலும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன்.\\
அப்படி இருக்கவேண்டிய அவசியமில்லை...ஏன் என்றால்...மதமும்,கடவுளும் மனிதர்கள் சம்பந்தபட்ட விசயம்.மனிதர்களே இல்லாமல் பூமி இயங்கி வந்திருக்கிறது.இது அனைத்து விஞ்ஞானிகளாலும் ஒத்துக் கொள்ளப்பட்ட விசயம். அதனால்தான், சர்ச் நடத்தும் பள்ளி-கல்லூரிகளிலும், இஸ்லாமிய நிறுவன கல்வி நிலையங்களிலும் இதை பற்றி சொல்லிக் கொடுக்கப்படுகிறது.எதிர்காலத்திலும் மனித இனம் அழியக்கூடிய வாய்ப்பு உள்ளது.அப்படி மனித இனம் அழியும் போது கூடவே கடவுள் கோட்பாடும்,மதமும் அழிந்துவிடும்.எதிர்காலத்திலும் மனிதன்,மதம் மற்றும் இந்த கடவுள்களும் இல்லாமலேயே இயற்கை தன் போக்கில் மாற்றங்களை செய்து கொண்டு இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.
/ஆகவே இந்த ஆச்சரியமான இயற்கையை ஆராயத்தொடங்கினாலே இந்த பயம் போய்விடும். \
//சரியாக புரியவில்லை.எவ்வாறு?\\
இயற்கையை பற்றி மதங்களும்,இதிகாசங்களும் சொன்ன ஆதரமற்ற பல விசயங்களையும்,நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்பட்ட கட்டுக்கதைகளையும் முதலில் நம் மனதிலிருந்து துடைத்தெறிந்துவிட்டு,நவீன விஞ்ஞான அடிப்படையில் இயற்கையை அணுகவேண்டும்.வருகின்ற விடைகள் நம் அச்சத்தையும், சந்தேகங்களையும் நீக்கும்.
அவ்வப்போது மாறும் விஞ்ஞான விதிகளை பற்றி சந்தேகப்பட வேண்டாம்.ஒரு விஞ்ஞான விதியை இன்னொறு விஞ்ஞான விதிதான் மாற்றமுடியும்.புது விஞ்ஞான கண்டுபிடிப்புகளும்,சாதனங்களும் பெருக பெருக பிரபஞ்சத்தின் ஆச்சரியங்கள் வெளிக் கொணரப்படும்.இது நம் காலத்திலேயே நடக்காமல் போகலாம்.அதனால் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது.அப்படி ஒரு அவசர முடிவுக்கு வந்தவைகள்தான் கடவுள் கோட்பாடும்,மதங்களும்.
எனவே இப்போது நாம் செய்துவரும் வழிபாடுகள்,படையல்,சபரிமலை விரதம்,வேளாங்கன்னி மாதா நடைபயணம்,ஹஜ் பயணம் எல்லாமே வீண்தான்.
பசிப் பிரச்சனையை தீர்த்து விட்டால் மனிதகுலத்திற்கு இங்கென்ன வேலை? மனித இனம் அழியும் வரை இயற்கையை ஆராய்ந்து பார்ப்பதுதான்.
//ஏனெனில் நான் சரி என்று நினைத்த பலவற்றை தவறு எனவும் தவறு என நினைத்த சிலவற்றை சரி எனவும் பின்னாளில் முடிவு செய்து இருக்கிறேன்.. இன்றைய என் நம்பிக்கை நாளை பொய்க்கலாம்.//
சத்தியமான வார்த்தைகள்.
உங்களுடைய இந்த பதிவுடன் நான் முழுதாக ஒத்துப்போகிறேன். மதங்களின் மீதான எனதுனிலைப்பாடும் இதுவே.
nantha,
பதிவுடன் உடன்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது.. வருகைக்கு மிக்க நன்றி.
ஆம்!மதம் தேவைதான்!ஒரே ஒரு வரியுடன் ஒரேயொரு மதம் மட்டுந்தான் தேவை.
கடவுளை மற!மனிதனை நினை!
Post a Comment