Monday, April 16, 2007

அச்சு கலக்கப் போவது நீங்களா?

என் பதிவை பார்த்ததுமே இருக்கும் ஆணியையெல்லாம் அம்போவென விட்டுவிட்டு வந்து ஆவலுடன் படித்துக்கொண்டிருக்கும் லட்சோப லட்ச வாசகர்களே...

இதோ உங்களுக்கு ஒரு சவால். கைப்பூ எனும் ஒரு மாவீரனை கூட்டமாக கூடி கும்மியடித்து அப்பு கொடுத்து அனுப்பி விட்ட வவாச எனும்
பதிவுலக வாசகர்களின் அங்கமாகிவிட்ட சங்கம் ஒரு போட்டி அறிவித்துள்ளது. என்னா போட்டின்னு பின்னாடி சொல்றேன்..


வக்கப்போர (வைக்கோல் போர்) பாத்துபுட்டு "போர் பல கண்டவன்"னு சொல்லிகிட்டு தளபதியாகிட்ட தேவும் ஆனை கட்டி போரடித்த பொண்ஸும் சேந்து இத ஆரம்பிச்சி ஒரு வருஷம் ஓடிடுச்சாம். சரி என்னாய்யா பண்ணியிருக்கங்கன்னு பாத்தா ஒன்னும் சொல்றாப்புல இல்ல..அணி சேராத அணிகள் மாதிரி கோஸ்டி சேராத அளுங்க நாங்கன்னு சொல்லியே ஒரு கோஸ்டிய சேத்துகிட்டு வரவன் போறவன் எல்லாரையும் சிரிக்க வச்சி அனுப்பி இருக்காங்க. மாசம் ஒருத்தன கூப்டு வச்சி கும்மராங்க..அத பாத்து சுத்தி இருக்கர எல்லாரும் மட்டுமில்ல அந்த பயபுள்ளயும் சேர்ந்தே சிரிக்குது.. சிரிச்சிக்கறது சிரிக்க வக்கிறது இத தவிர வேற ஒன்னும் உருப்படிய செய்யல..


சரி..அது என்னா போட்டி தெரியுமா?? பதிவெழுதி சிரிக்க வைக்க வைக்கிற போட்டியாம்...(நானெல்லாம் பதிவெழுதறதே ஒரு சிரிக்கிர விஷயம்தானேன்னு யாரும் முனுமுனுக்ககூடாது.) அதுக்கு பரிசு வேற கொடுக்கறாங்களாம்.. ஆனா என்ன? காசா கொடுத்தா குவார்ட்டர் அடிச்சிட்டு கவுந்துடுவோம்னு தெரிஞ்சி பொஸ்தகமா கொடுக்கறாங்க.. (ம்ம்.. படிக்கிற காலத்துலேயே நாங்க படிச்சதில்ல..இப்ப மட்டும் படிச்சிடுவோமா என்ன?)


போட்டி முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கு... இதுல எல்லாரும் கலந்துக்கனும்னு கேட்டுக்கறேன்..இவங்க நீங்க அனுப்பர காமடி பதிவுல எத எடுக்கறது..எத்க்கு பரிசு கொடுக்கறதுன்னு தெரியாம முழிக்கனும்.. திணரனும்.. சொல்லிபுட்டேன்... அந்த பதிவுகள படிச்சி எல்லாரும் சிரிக்கனும்.. சரியா?????


நெக்ஸ்ட் மீட் பன்னுவோம்.. வர்ட்டா?



மேலும் விபரங்களுக்கு :
http://vavaasangam.blogspot.com/2007/04/blog-post_6576.html
எழுத ஆரம்பிக்கும் முன் முக்கியமாக விதிமுறைகளைகளை படிக்கவும்.

இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் வவாசவுக்கு என் இனிய வாழ்த்துக்கள். மேலும் பல ஆண்டுகள் இந்த சங்கத்தின் சேவை தொடரவேண்டும் என விரும்புகிறேன்.அதற்கு வாசகர்களாகிய நாம் நம்முடைய ஆதரவை தொடர்ந்து வழங்குவோம் எனவும் நிச்சயமாக நம்புகிறேன்.


வவாச,
வாழ்க வளர்க.

Thursday, April 12, 2007

ரஜினி/சிவாஜி - சில கேள்விகள் - என் பதில்கள்.

சமயம் கிடைக்கும்பொழுதெல்லாம் ரஜினி மீது புழுதி வாரி தூற்றுவதும் அவர் மீதோ இல்லை திரைத்துறையின் மீதோ அக்கறை என்ற போர்வையில் அவரை மட்டம் தட்ட முயற்சிப்பதும் சிவாஜி படம் தோல்வியடைய வேண்டும் என அங்கலாய்ப்பதும் நடக்கிறது. அவற்றில் ரஜினி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அல்லது கேட்கப்படும் கேள்விகளுக்கான என் பதில்களே இந்த பதிவு.

1. வயதான காலத்தில் டூயட் பாடுகிறார்
இதனை சொல்பவர்களை பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது.அவர் என்ன கல்யானத்துக்கு பெண்ணா கேட்கிறார்? வயதை பற்றி கேள்வியெழுப்ப? இது ஊடகம். இங்கு திரையில் தெரிவதுதான் வயது. பார்ப்பவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா இல்லையா என்பதுதான் முக்கியம். அவர்கள் ஒப்புக்கொள்கையில் 20 வயது இளைஞன் 60 வயதுக்காரராகவும், 60 வயது பெரியவர் 20 வயது இளைஞனாகவும் நடிக்கலாம். இதில் என்ன தவறு? என்ன பிரச்சினை??? சத்தியராஜ் பெரியார் படத்தில் இளவயது பெரியாராகவும் வருகிறாராமே.. அது தவறா? அதை விடுங்கள். திரைத்துறையில் வெற்றி பெற்ற பல நடிகர்களை பாருங்கள். கமல்,அமிதாப், ஷாருக், சிரஞ்சீவி, மம்முட்டி,மோகன்லால், இப்படி அடுக்கிகொண்டே போக முடியும். இவர்கள் அனைவரும் இளைஞர்கள் அல்லவே? ஹீரோவாக நடிக்ககூடாதா? டூயட் பாடக்கூடாதா? ஸ்ரீதேவி எவ்வளவு காலம் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தார்?

அது மட்டுமின்றி எனக்கு தெரிந்தவரை அவர் ஒருவர்தான் வெளியில் வேஷம் போடாமல் தன் நிஜ வயதை மறைக்காமல் இருப்பவர்.படங்களில் மட்டுமே வேஷம் போடுபவர். அவரை பார்த்து இப்படி சிறுபிள்ளத்தனமான கேள்விகள் எழுப்புபவர்களை பற்றி மேற்கொண்டு என்ன சொல்ல???

2. ரஜினியின் அரசியல் ஈடுபாடு/அணுகுமுறை
ரஜினி அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை.(விருப்பமில்லை என்பதை தகுதியில்லை என சொல்வதாக அர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டாம்). அதே போல் அவர் வரப்போகிறேன் என பூச்சாண்டி காட்டுவதும் எனக்கு பிடிக்கவில்லை. அதே நேரத்தில் இதை ஒரு பெரிய குற்றமாக பேசுவதை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. அரசியல் என்பது ஆட்சி அதிகாரம் மூலம் நன்மை செய்ய ஒரு வாய்ப்பு என்பது பெயரளவில் கூட இல்லை. அரசியல் செய்ய நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. பல குள்ளநரித்தனக்களையும் சமாளிக்க, எதற்கும் எப்பொதும் அடுத்தவரை குறைகூற, தன்னையும் தன் கட்சியையும் தற்காத்துக்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும். இதீல் எதுவும் ரஜினிக்கு ஒத்துவரும் என என்னால் நம்பமுடியவில்லை. அப்படிப்பட்ட அரசியலில் நுழைவதற்கு தயக்கம் காட்டுவது தவறு அல்ல. அரசியலில் அவரின் செயல்பாடுகள் நிச்சயமாக சிறப்பானதாக இல்லை. ஆனால் குற்றம் சுமத்தும் அளவுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. அவர் அரசியலுக்கு வருவதாக சொன்னதால் இப்பொழுது என்ன கெட்டுப்போய் விட்டது? ஏன் இந்த கூச்சல்? ஏற்கனவே ஒரு பதிவில் நான் சொன்னது கீழே:
//அவர் அரசியலுக்கு வருவதும் வராததும் அவர் விருப்பம்...அப்படியே அவரை நம்பி காத்திருந்தாலும், பாதிக்கப்பட்டதாக சொல்வது அவர் ரசிகர்கள்தானே?உங்களுக்கு ஏன் இந்த நீலிக்கண்ணீர்?//



3.ரஜினி தரமான படங்களில் நடிக்க வேண்டும்.
திரைப்படத்துறையை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு நடிகர்/இயக்குனரிடம் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டோம். ரஜினியை சுற்றி ஒரு வட்டம் போடப்பட்டுவிட்டது. அதனை தாண்டுவது எளிதல்ல. (ஒரு சிறிய எடுத்துக்காட்டு: ஷங்கர் காதல் படத்தை தான் இயக்கி இருந்தால் தோல்வியடைந்து இருக்கும் என சொன்னது) தாண்டும் ஆசை அவருக்கும் இருக்கும் என நான் நம்புகிறேன். ஆனால் இது ஒரு சிலரின் தனிப்பட்ட ஆசை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல.. பலரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. ரஜினி படம் தோல்வியடைந்தால் அதன் பாதிப்பு சாதாரணமானதல்ல. பலரை பாதிக்கும்.
நான் சொல்வது ஆசை வேறு. நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் வேறு என்று..ரஜினி படங்களின் தரம் மேலும் உயரவேண்டும் எனவே நானும் விரும்புகிறேன். பல ரசிகர்களுக்கும் இந்த ஆசை இருக்கும் என்றே நம்புகிறேன்.

அதே சமயம் நாம் கலை என்பது ரசிப்பவர்களுக்கு அவர்கள் விருப்பத்தை கொடுப்பதும்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்படி கொடுப்பதில் ரஜினிக்கு நிகர் யாருமில்லை என்பது நிதர்சனம்.

4.சிவாஜியால் தரம் கெட்டுவிடும்
சிவாஜி படம் வெளிவருவதற்கு முன்பே யூகங்களின் அடிப்படையில் சொல்லப்படும் குற்றச்சாட்டு இது. இந்த படம் வருவதால் திரையுலகம் கெட்டுப்போய்விடும். 5 வருடம் பின்னோக்கி போய்விடும் என்பது எந்த விதத்திலும் சரியான வாதமல்ல.. சிவாஜி வெற்றிபெற்றால் சேரனும் பிரகாஷ்ராஜும் மசாலா படம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள் என கூறுகிறீர்களா?? இல்லை மக்கள் அது போன்ற படங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டர்கள் என சொல்கிறீர்களா? VCDயில் படம் பார்த்தவர்களை திரையரங்குகளுக்கு மறுபடியும் அழைத்து வந்து திரைத்துரைக்கு பெரும் பேறு செய்த படம் சந்திரமுகி. இதையெல்லாம் மறந்து விட்டு பேசுவது துரதிஷ்டமே.. இதனை பற்றி சிவாஜி படம் வெளிவந்த பின் பேசுவது மட்டுமே சரி.

5.ரஜினிக்கு நடிக்கத்தெரியாது.

இதற்க்கெல்லாம் பதில் சொல்லக்கூடகூடாது.. நடிப்புத்துறையில் 30 ஆண்டு காலம் கொடிகட்டி முடிசூடா மன்னனாக திகழும் ரஜினியை பர்த்து நடிக்கத்தெரியாது என்பதை பார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது.மேற்கொண்டு பேச எதுவுமில்லை.

மேற்கொண்டு ஏதுவும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. விவாதிக்கலாம்..சரியான முறையில்.


ரஜினிக்கும் சிவாஜிக்கும் எதிராக எழுதப்பட்ட பல பதிவுகளை பற்றி:

அப்படிப்பட்ட பதிவு ஒன்றில் ராஜ்குமார் என்ற ஒரு வாசகர் இட்ட பின்னுட்டத்தை 100% சரி என நான் நம்புவதால் அதையே அந்த பதிவுகளை பற்றிய என் பார்வையாக வைக்கிறேன்.

"ரஜினி என்ற தனிமனிதனின் புகழ் மீதான காழ்புணர்ச்சியை, அறிவு ஜீவித்தனமான வாதங்களை முன் வைத்து வெளிப்படுத்தியுள்ளீர்கள்.இவ்வாதங்களில் துளிக்கூட நேர்மை கிடையாது.யூகங்களிம் அடிப்படையில், சினிமா வரலாற்றையும் முழுமையாக பிரதிபலிக்காமல் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை கண்டிப்பாக பரபரப்பு ஏற்படுத்த எழுதப்பட்டுள்ளதே தவிர, வேறு எதற்காகவும் இல்லை"


நான் பார்த்தவரை ரஜினி ரசிகர்கள் நல்ல படங்களை பற்றி பாரட்ட தவறியதே கிடையாது.யாரையும் தவறாக பேசியது கிடையாது. ரஜினியை பற்றி தவறாக எழுதி சீண்டி விடும்நேரங்களில் சிலது சொல்லி இருக்கலாம். அவ்வாறு சீண்டி விடுவதை கோழைத்தனமாகவே நான் நினைக்கிறேன். அக்கரையுடன் எழுதப்படும் பதிவுகள் என்பது உண்மையானால் அது சரியான விவாதக்களத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும். அப்படியில்லமல் ரஜினியை பற்றி தவறாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றிவிட்டு நான் அக்கரையுடன் சொல்கிறேன் என்பது சரியா??

சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் நடிப்பின் மூலம் ஈர்த்துள்ள ரஜினி ஒரு மூன்றெழுத்து மந்திரம்தான். அசைக்க முடியாத ஒரு சக்திதான். உயர்ந்த இடத்தில் இருந்தாலும் துளியும் கர்வமின்றி எளிமையாக இருப்பவர். ஒரு கலைஞனை தாராள மனதுடன் பாரட்டுவது ஊக்கப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. இதுவும் அனைவருக்கும் தெரிந்தது. இருந்தும் ஏன் அவர் மேல் இந்த கோபம்? பாபா தொல்வியடைந்ததும் ரஜினி சகாப்தம் முடிந்தது என நம்பியதில் மண் விழுந்ததால் வந்த எரிச்சலா????