Saturday, October 07, 2006

மதம் தேவையா?

நண்பர் ஜோ அவர்களின் பதிவில் இந்த வரிகளை கண்டேன்..

//எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிற அளவுக்கு மத நம்பிக்கை கிடையாது//
இது சரியான மற்றும் தேவையான அணுகுமுறை என்றே தோன்றுகிறது..அவரின் வரிகள் என்னை யொசிக்க வைத்தன.. அதன் விளைவே இந்த பதிவு.. என் மனதுக்கு தோன்றியவைகளை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.. இதுதான் சரி என்றோ, தவறு என்றோ நான் கூறவில்லை.. ஏனெனில் நான் சரி என்று நினைத்த பலவற்றை தவறு எனவும் தவறு என நினைத்த சிலவற்றை சரி எனவும் பின்னாளில் முடிவு செய்து இருக்கிறேன்.. இன்றைய என் நம்பிக்கை நாளை பொய்க்கலாம். இது அனைவருக்கும் பொருந்தும் என்பது என் எண்ணம். அதே போல், நான் என்றும் மதம் சார்ந்த பதிவுகளையோ அதன் சர்ச்சைகளிலோ சிக்க கூடாது என நினைத்தவன்.. இருந்தாலும் இந்த பதிவு நல்ல முறையில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் இதனை உங்கள் மனதுக்கு கொடுக்கிறேன்.

நானும் யோசித்து பார்க்கையில் இது போன்றே பல தருணங்களில் உணர்ந்து இருக்கிறேன்.. பல நேரங்களில் நான் ஆத்திகனாகவும், நாத்திகனாகவும், இருந்து இருக்கிறேன். கடவுள் இருக்கிறாரா அவர் நல்லவரா? என்றெல்லாம் பல முறை கேள்விகள் எழுந்ததுண்டு.(அதற்கு முக்கிய காரணம் பிறப்பினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வேற்றுமைகள். ஒரு முறை என் பெற்றோரின் திருமண நாளை ஒரு ஆதரவற்றோர் விடுதியில் உள்ளவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டாடினோம்.. அன்று நான் சந்தித்த குழந்தைகளின் நிலை என்னை சாட்டையால் அடித்தது போல் இருந்தது... நான் என்ன நன்மை செய்ததால் இன்று அவர்களை விட சற்று வசதியான இடத்தில் இருக்கிறேன்? என்ன தீமை செய்ததால் அவர்கள் மற்றவரிடம் உணவுக்கும் மற்ற அடிப்படை வசதிகளுக்கும் கையேந்தும் நிலையில் இருக்கிறார்கள்? எனக்கு கிடைத்த பதில் நான் பிறந்த இடமும் அவர்கள் பிறந்த இடமும் தவிர வேறு காரணம் இருப்பதாக தோன்றவில்லை. இது பற்றி மேலும் பேசினால் பதிவு வேறு திசைக்கு திரும்பும் என்பதால் இதனை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்)
அது போலவே, கடவுள் இருக்கிறாரா/நல்லவரா என்று எத்தனை கேள்விகள் எனக்குள் தோன்றுகிறதோ கிட்டதட்ட அதே அளவு கேள்விகள் கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதரவாகவும் தோன்றுகின்றன.

எதனையும் அறுதியிட்டு முடிவுக்கு வர முடியாததுதான் இதன் முடிவு. எந்த ஒரு மனிதனையும் மனிதனாக மதிக்க வேண்டும் என்பதே என்றும் என் நிலைப்பாடு..

மதம் ஒவ்வொருவருக்கும் அவரது (அவர்களால் கட்டுப்படுத்த முடியாத)பிறப்பினால் அடையாளமாகிறது.. உலகில் ஒரே ஒரு மதம்தான் உண்மை என்றால், மற்ற மதத்தில் மனிதர்கள் தோன்ற காரணமான அந்த கடவுளே குற்றவாளி.
இதனை பிடித்துக் கொண்டு கொஞ்சம் மேலே போனால், மற்ற மதங்கள் ஏன் தோன்றின? தோன்ற வேண்டிய அவசியம் என்ன? ஏன் கடவுள் அதனை கட்டுப்படுத்த வில்லை. ஏன் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பதில்லை?(ஒரு மனிதனை உறுவாக்குவது அவனுடைய சூழ்நிலைகளும் அவன் சந்திக்கும் மனிதர்களும்தான். அதனையும் அவன் கட்டுப்படுத்த முடிவதில்லை.)
இது போல இன்னும் பற்பல கேள்விகள் பிறக்கின்றன..

ஆனால் ஒன்று.. மதங்களின் (சரியான) பழக்கங்களை பின்பற்றுகையில் மனிதன் தவறுகள் செய்யாமல் தன்னை காத்துக்கொள்கிறான். எப்படி சட்டங்கள் ஒரு குடிமகனை தவறுகள் செய்தால் தண்டனை உண்டு என பயமுறுத்தி அவன் தீய வழியில் செல்லாமல் இருக்க பயன்படுகிறதோ அது போல. ஆகவே மனித குலத்திற்கு பாதை தெரிந்து நடக்க மதங்கள் தேவை. இந்த நிலையிலேயே மதங்களுக்கான மதிப்பு இருக்க வேண்டும்.
அடுத்தவர் மதத்தினை, நம்பிக்கைகளை மதிக்க கூடிய மனநிலை காலத்தின் கட்டயமாகிறது.. அதே நேரத்தில் அந்த நம்பிக்கைகள் மற்ற மனிதரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். தவறாக இருப்பின் விவாதிக்ககூடிய, தவறு இருந்தால் மாற்றிகொள்ளக்கூடிய சூழ்நிலை நிலவ வேண்டும்.


சிறு வயதில் படித்த இந்த வரிகள் ஞாபகம் வருகிறது..
"மதம் என்பது குளிர் காலத்தில் எரியும் நெருப்பு போன்றது..தூர விலகினால் குளிரும்.. மிக மிக அருகில் நெருங்கினால் எரித்து விடும்."